போர்முனையில் வீர தமிழ்மகன்கள் !

ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன்பு, மறைந்த கருணாநிதி கொடி நாள் செய்தியாக, “இந்திய மண்ணின் வீரம் என்றைக்கும் விலை போனதில்லை.

Update: 2021-11-30 19:47 GMT
ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன்பு, மறைந்த கருணாநிதி கொடி நாள் செய்தியாக, “இந்திய மண்ணின் வீரம் என்றைக்கும் விலை போனதில்லை. தமிழரின் வீரமும் தனிச்சிறப்பு வாய்ந்தது” என்று பெருமைப்பட கூறினார். தமிழர்களின் வீரம் பண்டைய காலந்தொட்டே அவர்கள் உடம்பில் ஊறிய ஒன்றாகும். 2-ம் நூற்றாண்டின்போது படைக்கப்பட்ட ஒரு புறநானூற்று பாடலில், ஒரு வீரத்தாயிடம் அண்டை வீட்டார் வந்து உன் மகன் போர்க்களத்தில் புறமுதுகிட்டு வீழ்ந்து கிடக்கிறான் என்று சொல்லி சென்றார்கள். வெகுண்டெழுந்தாள் வீரத்தாய். என் மகன் மார்பிலே வேல் தாங்காமல் முதுகிலே வேல்பட்டு வீழ்ந்திருந்தால், அவனுக்கு பால் கொடுத்த என் மார்பை அறுத்தெறிவேன் என்று சபதமிட்டாள். போர்க்களத்தில் தன் மகன் உடலை தேடி, தேடி கண்டுபிடித்தாள். ஆகா! என் மகன் புறமுதுகிட்டு சாகவில்லை. மார்பிலே வேல் தாங்கித்தான் மாண்டுகிடந்தான் என்று கண்டறிந்தாள். அவள் கண்களில் ஆனந்த கண்ணீர் வடிந்தது. தமிழர் வீரம் என்பது அன்றும் இருந்தது, இன்றும் இருக்கிறது என்பதை வீர, தீர செயலுக்குரிய உயரிய விருதான வீர சக்ரா விருதை அபிநந்தன் வர்த்தமானும், பழனியும் பெற்று நிரூபித்து காட்டியிருக்கிறார்கள்.

அபிநந்தன் வர்த்தமானின் பூர்வீகம் காஞ்சீபுரம் அருகே உள்ள திருப்பணமூர். இவரது தந்தை ஓய்வுபெற்ற விமானப்படை ஏர்மார்ஷல். தாயார் ஒரு டாக்டர். இவர்கள் சென்னை மாடம்பாக்கத்தில் வசித்து வருகிறார்கள். அபிநந்தனின் மனைவியும் முன்பு விமானப்படையில் வேலை பார்த்தவர். ஆக குடும்பமே ராணுவ குடும்பம் என்ற வகையில், அபிநந்தன் வர்த்தமானுக்கு வீரம் என்பது குடும்ப சொத்தாக இருக்கிறது. 2019-ம் ஆண்டு பிப்ரவரி 27-ந்தேதி இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் ஜெட் விமானம் ஒன்றை அபிநந்தன் சுட்டு வீழ்த்தினார். சிறிது நேரத்தில் அவர் செலுத்திய ‘மிக்-21’ ரக போர் விமானத்தின் மீது பாகிஸ்தான் விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதையடுத்து, விமானத்தில் இருந்து வெளியே குதித்த அபிநந்தன் பாகிஸ்தான் எல்லையில் விழுந்தார். அவர் மீது பாகிஸ்தானில் தாக்குதல் நடந்தது. கண்களை கட்டி கூட்டிக்கொண்டு போய் விசாரணை நடத்தினர்.

உடலில் காயம்பட்ட நிலையிலும், பாகிஸ்தான் ராணுவத்திடம் எந்த ராணுவ ரகசியத்தையும் சொல்லாமல் அவர் காட்டிய துணிச்சலும், சாதுர்யமான பதிலும் ‘இதுதாண்டா எங்கள் வீரர்கள்’ என்று நெஞ்சை நிமிர்க்க வைத்தது. 3 நாட்களுக்கு பிறகு சர்வதேச நாடுகளின் வற்புறுத்தலால் பாகிஸ்தான் அவரை விடுதலை செய்தது. இதுபோல கடந்த ஆண்டு ஜூன் 15-ந்தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு எல்லைக்குள் நுழைய முயன்ற சீன ராணுவ வீரர்களுக்கும், இந்திய ராணுவத்தினருக்கும் ஏற்பட்ட பயங்கர மோதலின்போது, தெலுங்கானாவை சேர்ந்த ராணுவ கர்னல் சந்தோஷ் பாபு, தமிழகத்தை சேர்ந்த ஹவில்தார் கே.பழனி உள்பட நமது வீரர்கள் அதிக வீரமாக நடத்திய மோதலில் 20 பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்த தமிழக வீரர் கே.பழனி ராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூரை சேர்ந்தவர். பழனியின் வீரம் என்பது வார்த்தைகளால் அளவிடமுடியாது. எதிரிகள் கூர்மையான ஆயுதங்களால் தாக்கியதில், ரத்தம் ஒழுகிக்கொண்டிருந்த நிலையிலும் மிக துணிச்சலுடன் தன் சக வீரர்களை காப்பாற்ற பாடுபட்டார். அவருடைய வீர, தீர செயல் மற்ற வீரர்களையும் ஆக்ரோஷமாக போரிட்டு எதிரியின் ஊடுருவலை தடுக்க ஒரு பெரிய உந்து சக்தியாக இருந்தது. பழனிக்கு கிடைத்த விருதை அவர் மனைவி வானதிதேவி பெற்றுக்கொண்டு என் மகனையும் ராணுவ அதிகாரியாக்குவேன் என்று சூளுரைத்தது சிலிர்க்க வைக்கிறது. தமிழ்நாடு ஒரு வீர மண் என்று மீண்டும் உறுதிப்படுத்திய விமானப்படை அதிகாரி அபிநந்தனுக்கு தமிழக மக்கள் வாழ்த்து தெரிவிக்கிறார்கள், இறந்தும், இறவா புகழ் கொண்ட ஹவில்தார் பழனிக்கு வீரவணக்கம் செலுத்துகிறார்கள்.

மேலும் செய்திகள்