அறைகளில் குளிர்ச்சி நிலவச் செய்யும் மேல்தள கூல்ரூப் டைல்ஸ்

தொழில்நுட்பமாகவும், நவீன கட்டுமான யுக்தியாகவும் ரூப் டைல்ஸ் பதிக்கும் முறை இப்போது பரவலான நடைமுறையில் இருந்து வருகிறது.

Update: 2023-10-14 00:45 GMT

ஐம்பது அல்லது அறுபது ஆண்டுகளுக்கு முந்தைய மாடி வீடுகளின் கட்டமைப்பின்போது மேல்தளத்தை சுண்ணாம்பு பவுடர், கடுக்காய் போன்ற பொருட்களை கலந்து வெதரிங் கோர்ஸ் அமைத்தார்கள். பின்னர் அந்த முறை செங்கல் பொடி மற்றும் சுண்ணாம்பு பவுடர் ஆகியவற்றை கலந்து மேற்கூரைகளில் இடப்பட்டு, சுருக்கி என்ற பெயரில் வெதரிங் கோர்ஸ் அமைக்கப்பட்டது. அந்த முறை வெயில், மழை ஆகிய இயற்கை சீற்றங்களுக்கு சரியான பாதுகாப்பு கவசமாக செயல்படுவதில்லை என்பது அனுபவத்தில் தெரிய வந்துள்ளது. அதற்கு மாற்று தொழில்நுட்பமாகவும், நவீன கட்டுமான யுக்தியாகவும் ரூப் டைல்ஸ் பதிக்கும் முறை இப்போது பரவலான நடைமுறையில் இருந்து வருகிறது.

கட்டுமான பணிகளில் முக்கியமாக கவனிக்கவேண்டிய விஷயங்களில் ஒன்றாக மேல் தளத்தில் போடப்படும் வெதரிங் கோர்ஸ் அமைப்பு உள்ளது. ஒரு சில இடங்கள் தவிர பல இடங்களில் மேற்கூரைகளின் மீது சுருக்கி போடப்படும் பழைய முறைதான் இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த முறையானது மேற்கூரையில் படியும் வெப்பத்தின் பெரும்பகுதியை வீடுகளுக்குள் கடத்தி விடுகிறது. அந்த பழைய முறைக்கு மாற்றாக ரூப் டைல்ஸ் எனப்படும் நவீன வெதரிங் கோர்ஸ் ஓடுகள் தற்போது நிறைய அறிமுகமாகியிருக்கின்றன.

கூரைகள் அமைப்பது என்பது வெப்பத்தையும், நீர்க்கசிவுகளையும் தடுப்பதோடு, ஒட்டுமொத்த கட்டமைப்பின் உறுதியை காப்பதாகவும் இருக்கவேண்டும். கட்டிடங்களின் மேல் தளம் ஈரப்பதம் இல்லாத நிலையில் ஒரு சதுர அடிக்கு 15 கிலோ முதல் 18 கிலோ எடை கொண்டதாக இருக்கும். ஆனால், மழைக்காலங்களில் ஈரப்பதத்தின் காரணமாக ஒரு சதுர அடி மேற்கூரை 20 கிலோ எடையுள்ளதாக மாறிவிடும். நவீன ரூப் டைல்ஸ் கொண்டு கூரை அமைக்கும்பட்சத்தில் வெயில், மழை மற்றும் பனி ஆகிய காலகட்டங்களில் மேற்கண்ட எடையளவில் பாதி மட்டுமே அதிகரிக்கும் என்று ரூப் டைல்ஸ் தயாரிப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

வழக்கமாக அமைக்கப்பட்ட கான்கிரீட் தளத்தின் மீதும் சுலபமாக டைல்ஸ்களை பதித்துக்கொள்ள இயலும். அதற்கு முன்னர், அவை சுத்தமான நீருக்குள் அரை மணி நேரம் அமிழ்த்தி வைக்கப்பட்ட பிறகு தளத்தின் மேற்பரப்பை சரிசெய்துகொண்டு சிமெண்டு கலவையை பூசிவிட வேண்டும். அதன் பிறகு டைல்ஸ்களை மேலே கச்சிதமாக ஒட்டிவிடலாம். அவற்றுக்கிடையில் இருக்கும் இடைவெளிகளை பூசி அடைப்பதற்காக கிரெளட்டிங் ரசாயனங்கள் இருக்கின்றன. அவற்றை பூசிவிட்டால் அவற்றின் இடைவெளிகள் கச்சிதமாக அடைக்கப்படுவதோடு தண்ணீர் கசிவுகள் ஏற்படாமலும் தடுக்கப்படும். பகல் நேரத்தின் அனல் கக்கும் சூரிய வெப்பம் கூரையால் ஈர்த்துக்கொள்ளப்படாமல் தடுக்கப்படுவதோடு, குளிர் அடிக்கும் மழைக்காலத்தில் உண்டாகும் நீர்க்கசிவுகள் ஏற்படும் வாய்ப்பையும் ரூப் டைல்ஸ் வகைகள் தடுக்கின்றன. ஈரப்பதம் காரணமாக கறைகள் எற்படுவது, பாசிகள் படர்ந்து வழுக்குவது ஆகிய தொல்லைகளும் இதில் ஏற்படுவதில்லை. பசுமை கட்டிட பொருளாகவும், செலவு சிக்கனமாகவும் ரூப் டைல்ஸ் வகைகள் உள்ளன.

கட்டிடத்தின் மீது அதிக எடையை அவை ஏற்படுத்துவதில்லை. தற்போது இவ்வகை கற்களை ஐ.ஜி.பி.சி எனப்படும் இந்தியன் கிரீன் பில்டிங் கவுன்சில் என்ற அமைப்பின் சான்றிதழ் பெற்று பல நிறுவனங்கள் தயாரிக்கின்றன. பல வண்ணங்களிலும் இவை கிடைப்பதால் அழகான மேல் தளத்தை சுலபமாக கட்டமைக்க இயலும்.

Tags:    

மேலும் செய்திகள்