வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்க ஆலோசனை; முதல்-மந்திரி சித்தராமையா பேட்டி

கர்நாடகத்தில் மின்சாரத்தின் தேவை அதிகரித்துள்ளதால் வெளிச்சந்தையில் இருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்ய ஆலோசிக்கப்படுவதாக முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார்.

Update: 2023-10-13 18:45 GMT

பெங்களூரு:

கர்நாடகத்தில் மின்சாரத்தின் தேவை அதிகரித்துள்ளதால் வெளிச்சந்தையில் இருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்ய ஆலோசிக்கப்படுவதாக முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார்.

முதல்-மந்திரி சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

அரசியல் நோக்கம்

கர்நாடகத்தில் மின் உற்பத்தி குறைந்து வருகிறது. ஆனால் மின் பயன்பாடு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு(2022) இதே காலக்கட்டத்தில் மின் தேவை 9 ஆயிரம் மெகாவாட்டில் இருந்து 10 ஆயிரம் மெகாவாட்டாக இருந்தது. ஆனால் தற்போது மின் தேவை 15 ஆயிரத்தில் இருந்து 16 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. அதனால் தற்போது மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த தட்டுப்பாட்டை சமாளிக்க மின்சாரத்தை கொள்முதல் செய்வது குறித்து ஆலோசனை நடத்த உள்ளேன்.

கர்நாடகத்தில் மின்சாரம் உற்பத்தி செய்பவர்கள் அதை அரசுக்கு விற்பனை செய்ய வேண்டும். வேறு எங்கும் விற்பனை செய்யக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளோம். மின் தட்டுப்பாட்டை சமாளிக்க அரசு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று பா.ஜனதா கூறுகிறது. அதற்கெல்லாம் நான் பதில் கூற முடியாது. அவர்கள் அரசியல் நோக்கத்தில் பேசுகிறார்கள்.

விவசாய பம்புசெட்டுகள்

கர்நாடகத்தில் இந்த ஆண்டு போதிய மழை பெய்யாததால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஆயினும் மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. எதிர்க்கட்சிகள் கூறுவது போல் முழுமையான அளவில் மின்வெட்டு அமல்படுத்தப்படவில்லை. அதே போல் விவசாய பம்புசெட்டுகளுக்கு 7 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். ஆனால் அந்த மின்சாரத்தையும் முழுமையாக வழங்க முடியவில்லை. மின் தட்டுப்பாட்டை நீக்குவது, வெளிச்சந்தையில் இருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்வது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்