ரியல் எஸ்டேட் துறையில் "சீனியர் கம்யூனிட்டி" வீட்டு வசதி திட்டங்கள்

Update: 2023-09-23 02:05 GMT

சீனியர் லிவிங் கம்யூனிட்டி, ரிட்டயர்மெண்டு கம்யூனிட்டி போன்ற முதியோர்களுக்கான தனிப்பட்ட குடியிருப்பு திட்டங்கள் தற்போது தேசிய அளவில் ரியல் எஸ்டேட் துறையில் பரவலாகி வருகின்றன. தமிழகத்தின் மொத்த ஜனத் தொகையில் சுமார் 18 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவர்கள் மூத்த குடிமக்கள் ஆவர். இன்னும் இரண்டு ஆண்டுகளில் அந்த அளவு 3 சதவிகிதத்துக்கும் மேல் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் அடிப்படையில் மூத்தோர் சிரமமின்றி வாழ மேற்கண்ட குடியிருப்பு திட்டங்கள் நகர்ப்புறங்களில் அறிமுகமாகி வருகிறது.

சீனியர் லிவிங் வாழ்க்கைக்கு ஏற்ற நகரமாக கோயம்புத்தூர் இருப்பதாக தெரிய வந்துள்ளது. சென்னை பெருநகரத்திலும் போதுமான உள்கட்டமைப்பு, தேவையான மருத்துவ வசதிகள், பாதுகாப்பான சுற்றுச்சூழல் போன்ற அம்சங்கள் கொண்ட மூத்த குடிமக்களுக்கான குடியிருப்பு திட்டங்கள் உருவாகின்றன. அத்தகைய கட்டுமான திட்டங்களுக்கு வரவேற்பு உள்ள நிலையில் கட்டுநர்கள் அவற்றில் கவனம் செலுத்துவதாக ரியல் எஸ்டேட் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

அடுக்குமாடி குடியிருப்புகளில் வயதான தாய், தந்தையர்களை பராமரிக்க ஏற்ற வசதிகள் அமைந்திருப்பதில்லை. மூத்த குடிமக்களுக்கான அடிப்படை வசதிகள் அனைத்து குடியிருப்புகளிலும் செய்யப்பட்டிருப்பதில்லை. அதனால், தங்கள் குடும்பத்துடன் ஒன்றாக சேர்ந்து வாழ பெருநகரங்களுக்கு அடுத்த நிலையில் உள்ள இரண்டாம் நிலை நகரங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் மூத்த குடிமக்கள் குடியிருப்பு திட்டங்களை தேர்வு செய்கிறார்கள்.

அந்த குடியிருப்புகளில் மருத்துவ வசதிகள், உள் கட்டமைப்பு, பொழுதுபோக்கு வசதிகள் என பல்வேறு அம்சங்களும், முதியோர்களுக்கு ஏற்ற உணவு வகைகள், பாத்ரூம் ஆன்டிஸ்கிட் டைல்ஸ், டாய்லெட்டில் பிடித்துக்கொண்டு எழ வசதியாக ஹேண்ட் கிராப் பார்கள், இன்டர்நெட், சுற்றுலா, தியேட்டர், டின்னர் ஆகிய வசதிகளும் செய்து தரப்படுகின்றன. ஒவ்வொரு வீட்டையும் நிர்வகிக்க தனிப்பட்ட சேவையாளர் வசதி அளிக்கப்படுகிறது.

சக்கர நாற்காலிகளுக்கேற்ற சரிவான பாதைகள், மருத்துவ பராமரிப்புக்கு முன்னுரிமை, உடனடியாக உதவியாளரை அழைக்க வீடுகளில் அவசர ஸ்விட்ச் வசதி, அழைத்தவுடன் மருத்துவர்கள் வீட்டுக்கு வருவது, நர்ஸ் வசதிகள் போன்ற பல ஏற்பாடுகள் மேற்கண்ட குடியிருப்புகளில் செய்து தரப்பட்டிருப்பதை பலரும் வரவேற்றுள்ளனர். அந்த திட்டங்களில் முதிய தம்பதியினர்களுக்கு ஏற்ற வகையில் 700 முதல் 1400 சதுரடி அளவில் ஒரு பெட்ரூம் அல்லது 2 பெட்ரூம் வசதியுடன் சிறிய வீடுகளாக அமைந்துள்ளன.

அவற்றை சுலபமாக வாங்கவும் அவற்றில் பராமரிப்பு பணிகளை எளிதாக செய்து கொள்ள இயலும். பட்ஜெட்டை கணக்கில் கொண்டு மலிவு விலை பிரிவு மற்றும் நடுத்தர விலை பிரிவு வீட்டு வசதி திட்டங்கள் கட்டுனர்கள் மேற்கொள்கிறார்கள். குறிப்பாக, 60 முதல் 80 வயதுக்குள் இருப்பவர்களுக்கு தேவையான வசதிகள் கொண்ட குடியிருப்புகள் இந்திய அளவில் இன்னும் பெரிய அளவில் இல்லை என்ற நிலையில் பல கட்டுமான நிறுவனங்கள் அவற்றில் கவனம் செலுத்தி வருவது கவனிக்கத்தக்கது.

சென்னையில் ஓ.எம்.ஆர், ஜி.எஸ்.டி, இ.சி.ஆர் போன்ற தென்பகுதிகளில் சீனியர் லிவிங் கட்டுமான திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. திருச்சி மற்றும் சேலம் உள்ளிட்ட இரண்டாம் நிலை நகரங்களிலும் அதற்கடுத்து உள்ள மூன்றாம் நிலை நகரங்களிலும் மேற்கண்ட கட்டுமான திட்டங்கள் குறிப்பிடத்தக்க அளவில் மேற்கொள்ளப்படுகின்றன. சீனியர் லிவிங் கம்யூனிட்டி குடியிருப்புகள் முதியோர் இல்லங்களுக்கு மாற்று என்று பலரும் கருதுகிறார்கள். பணி நிறைவடைவதற்கு 4 அல்லது 6 வருடங்கள் முன்பே பலரும் சீனியர் கம்யூனிட்டி திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்