கட்டுமான முறையில் இரு முக்கிய தொழில்நுட்பங்கள்

கட்டிடக்கலை தொழில் நுட்பங்களில் உள்ள பல்வேறு யுக்திகளில் ‘ரேட் டிராப் பாண்ட்’ (Rat Trap Bond) மற்றும் ‘பில்லர் ஸ்லாப்’ (Filler Slab) ஆகிய இரண்டு வகைகள் குறிப்பிடத்தக்கவை.

Update: 2023-09-14 16:23 GMT

கட்டுமான பொருள்களுக்கான மொத்த பட்ஜெட்டில் அவற்றிற்கான போக்குவரத்து செலவு குறிப்பிட்ட அளவில் இருக்கும். அவற்றை கட்டுப்படுத்த அந்தந்த பகுதிகளில் கிடைக்கும் கட்டுமான பொருள்கள் மற்றும் கட்டுமான முறை ஆகியவற்றை பயன்படுத்தி கட்டிடங்களை வடிவமைப்பது லாரி பேக்கர் (Laurence Wilfred "Laurie" Baker) (மார்ச்,02, 1917 - ஏப்ரல்,01, 2007) என்ற கட்டுமான நிபுணரின் முக்கிய வழிமுறையாக இருந்தது.

கட்டிடக்கலை தொழில் நுட்பங்களில் உள்ள பல்வேறு யுக்திகளில் 'ரேட் டிராப் பாண்ட்' (Rat Trap Bond) மற்றும் 'பில்லர் ஸ்லாப்' (Filler Slab) ஆகிய இரண்டு வகைகள் குறிப்பிடத்தக்கவை. அந்த இரண்டு யுக்திகளையும் கண்டறிந்து வடிவமைத்த லாரி பேக்கர் இந்தியாவில் குடியேறிய இங்கிலாந்து கட்டிட கலைஞர் ஆவார்.

அவரது கட்டுமான டெக்னிக் மூலம் நமது நாட்டில் பல உதாரண கட்டுமானங்களை உருவாக்கி இருக்கிறார். அதாவது அந்தந்த பகுதிகளில் கிடைக்கும் பொருட்களை கொண்டு சம்பந்தப்பட்ட இடம் மற்றும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப செலவு குறைவாக வீடுகள் உள்ளிட்ட இதர கட்டுமானங்களை அமைப்பதாகும். அந்த கட்டிடங்களின் உள் அறைகளை எளிதாக பயன்படுத்துவதற்கு ஏற்ற வடிவமைப்பில் உருவாக்கிய அவரது பாணி இந்திய கட்டுமானத்துறையில் சிறப்பிடம் பெற்றுள்ளது.

இன்றைய விலைவாசி நிலவரத்தில் கட்டுமான பணிகளில் பொதுவாக இங்கிலீஷ் பாண்ட் அல்லது பிளெமிஷ் பாண்ட் என்ற பொதுவான தொழில் நுட்ப முறையில் அமைக்கப்படுகின்றன. அதாவது சுவர் அமைப்பில் செங்கல் கிடைமட்டமாக இடைவெளி இல்லாமல் வைக்கப்பட்டு சுவர் எழுப்பப்படுகிறது.

லாரி பேக்கர் 'ரேட் டிராப்' முறையில் செங்கல்லை செங்குத்தாக நிற்க வைத்து, வெற்றிடங்கள் ஏற்படுத்தப்பட்ட சுவர்கள் கட்டப்படுவதால், செங்கல் மொத்த எண்ணிக்கை மற்றும் வேலை நேரம் ஆகியவை மிச்சம் ஆகிறது. பழைய முறைப்படி ஒரு சுவரை கட்டி முடிக்க ஆகும் நேரத்தில், அந்த முறைப்படி இரண்டு சுவர்கள் அமைக்க முடியும். அத்துடன் செலவு சிக்கனம் ஏற்படுவது அறியப்பட்டது.

அவரது 'பில்லர் ஸ்லாப்' என்ற மேற்கூரை அமைப்பு, கூரைகளின் அழுத்தம் தாங்கும் தன்மைக்கான 'பினிட் எலிமென்ட் அனாலிசிஸ்' (Finite Element Analysis) பரிசோதனை மூலம் வழக்கமான கூரை அமைப்பை விட வலிமையாக இருப்பது அறியப்பட்டது. அந்த முறையில் கான்கிரீட்டுக்கு பதிலாக மங்களூர் ஓடுகள் வரிசையாக வைக்கப்பட்டு அதன் மேல் மேற்கூரை கான்கிரீட் இடப்பட்டு கூரை கட்டமைப்பு செய்யப்படுகிறது.

மேற்கண்ட இரு டெக்னிக் மூலம் 2004-ம் ஆண்டு சுனாமியால் பாதிக்கப்பட்ட கடற்கரையோர பகுதி வீடுகளை கட்டுமான நிபுணர் குழுவினர் மறுகட்டமைப்பு செய்து மக்கள் பயன்பாட்டுக்கு அளித்தது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட இரண்டு தொழில் நுட்ப யுக்திகளையும் இந்திய தரச் சான்றிதழ் அமைப்பு வெளியிட்டுள்ள நேஷனல் பில்டிங் கோடு-2016 என்ற தேசிய கட்டிட விதிகளில் சேர்க்கப்பட்டுள்ளன. சிக்கன பட்ஜெட்டுக்கு ஏற்ற அந்த இரண்டு கட்டுமான யுக்திகளும் தற்போது சட்டப்படி அங்கீகாரம் பெற்றுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்