"ஒர்க் ஃப்ரம் ஹோம்" - வீட்டில் ஏற்படுத்த வேண்டிய வசதிகள்

Update: 2023-09-16 01:59 GMT

பன்னாட்டு தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் 'வீட்டிலிருந்து பணி செய்யும்' (WORK FROM HOME) திட்டத்தை நடைமுறைப்படுத்தி இருக்கின்றன. மேலை நாடுகளில் பரவலாக இருந்த இந்த முறை இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் பலவற்றிலும் தற்போது கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள இதர தனியார் நிறுவனங்களும் அவர்களது ஊழியர்களை வாரத்தின் குறிப்பிட்ட நாட்கள் வீட்டிலிருந்தபடியே பணிகளை மேற்கொள்ள தெரிவித்துள்ளன. அலுவலக உள்கட்டமைப்பு வசதிகள் அனைவரது வீடுகளிலும் இருக்காது என்பதால் சில மாற்றங்களை வீட்டில் செய்து கொள்வது அவசியம். அப்படிப்பட்ட மாற்றங்கள் பற்றி உள்கட்டமைப்பு வல்லுனர்கள் அளித்துள்ள குறிப்புகளை இங்கே காணலாம்.

உள்கட்டமைப்பும், அலுவலக சூழலும் உள்ள இடத்தில் பணிபுரிவதற்கும், வீட்டின் ஒரு பகுதியை மாற்றியமைத்து பணி புரிவதற்கும் பல மாற்றங்களை, ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அலுவலக பணிகளை வீட்டிலிருந்து செய்வது பெண் ஊழியர்களுக்கு பல விதங்களிலும் பாதுகாப்பானது. வீட்டில் உள்ள ஒரு அறையை பணி புரிவதற்கேற்ப மாற்றம் செய்யும்போது லைப்ரரி, படிக்கும் அறை ஆகியவற்றுக்கு ஏற்ப அமைத்துக் கொள்ளலாம். ஒரு படுக்கையறை கொண்ட வீடுகளில் ஒரு பகுதியை தடுப்பு அல்லது ஸ்கிரீன் அமைத்து தனிப்பட்ட இடமாக பயன்படுத்தலாம். அல்லது படுக்கை அறையின் ஒரு பகுதியை பயன்படுத்தலாம்.

வெளி நபர்கள் அடிக்கடி வந்து செல்லும் நிலையில் வரவேற்பறையின் ஒரு பகுதியை பார்டிஷன் மூலம் பிரித்து பயன்படுத்தலாம். அறையின் கார்னர் பகுதி, மாடிப்படிகளின் கீழ்ப்புறம் அல்லது அறையின் ஒரு பக்க உள்ள சுவரை ஒட்டிய பகுதியை தேர்வு செய்து பணியிடமாக அமைக்கலாம். மேஜை, நாற்காலி, அலமாரி ஆகியவற்றுடன், மணிக்கணக்காக உட்கார்ந்து வேலை செய்யும் நிலையில் முதுகுவலி ஏற்படுத்தாத நாற்காலியையும் தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும்.

பணி புரியும் அறை ஜன்னலுக்கு அருகில், செடிகள் வளர்ந்துள்ள வெளிப்பகுதி, மரங்கல் உள்ள பகுதியாக இருந்தால் கண்களுக்கு இதமாக இருக்கும். அலுவலகங்களில் வைக்க இயலாத குடும்ப புகைப்படம், பரிசுகள் ஆகியவற்றை வீட்டில் பணி புரியும் பகுதிகளில் வைக்க முடியும். பணி புரிய அமரும் இடத்தில் எதிர்ப்புற சுவர் வெண்மை நிறத்தில் இருப்பதுடன், மின்விளக்கு வெளிச்சமும் பரவலாக இருப்பது நல்லது.

பணி இடத்துக்கு அருகில் வெள்ளை மார்க்கர் போர்டு ஒன்றை சுவரில் மாட்டி வைத்து, தினமும் காலையில் அன்று செய்ய வேண்டிய பணிகள் பற்றிய குறிப்பினை எழுதி வைத்துக்கொள்ளலாம். இல்லாவிட்டால், கணினியில் ஸ்டிக்கி நோட்ஸ் பகுதியில் குறிப்புகளாக வைத்துக்கொண்டு பணிகளை செய்து வரலாம்.

மனம் கவரும் நிறங்களில் லைட் செட்டிங் அமைப்பது கண்களுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும். அறைகளில் இயற்கையான வெளிச்சம் வரும் அளவுக்கு மனதில் உற்சாகம் ஏற்படும். குறிப்பாக நல்ல வெளிச்சமும், காற்றும் வரக்கூடிய ஜன்னல் அமைந்துள்ள பகுதிகள் கணினி பணியின் களைப்பை அகற்ற உதவுகின்றன.

பணி புரியும் அறை அல்லது இடங்களில் குழந்தைகள் குறுக்கீடு என்பதை தவிர்க்க இயலாது. வீட்டில் உள்ள குழந்தைகளுடன், பக்கத்து வீட்டு குழந்தைகளும் அந்த சிக்கலுக்கு துணையாக அமைந்து விடுவார்கள். படிப்பு சம்பந்தமான பயிற்சிமுறைகளுக்கு மட்டுமே சில கட்டுப்பாடுகளுடன் அவர்களை அங்கே அனுமதிக்கலாம். வளர்ப்பு பிராணிகளான நாய் அல்லது பூனை போன்றவை அங்கே உலாவுவதை அனுமதிக்கக்கூடாது.

Tags:    

மேலும் செய்திகள்