வங்காளதேசத்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: 10 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா வெற்றி

வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் டி காக், அம்லாவின் சதங்களால் தென்ஆப்பிரிக்க அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் மெகா வெற்றியை பெற்றது.

Update: 2017-10-15 23:30 GMT
கிம்பெர்லி,

வங்காளதேச கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்த வங்காளதேச அணி அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது.

இதன் முதலாவது ஒரு நாள் போட்டி கிம்பெர்லியில் நேற்று நடந்தது. புற்கள் இன்றி முழுக்க முழுக்க பேட்டிங்குக்கு உகந்த வகையில் காணப்பட்ட இந்த ஆடுகளத்தில் முதலில் பேட் செய்த வங்காளதேச அணி 7 விக்கெட்டுக்கு 278 ரன்கள் சேர்த்தது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக வங்காளதேச அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். 5-வது சதத்தை பூர்த்தி செய்த முஷ்பிகுர் ரஹிம் 110 ரன்களுடன் (116 பந்து, 11 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக சதம் அடித்த முதல் வங்காளதேச வீரர் என்ற சிறப்பை முஷ்பிகுர் ரஹிம் பெற்றார்.

மிரட்டிய ஜோடி

அடுத்து களம் புகுந்த தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் வங்காளதேசத்துக்கு பதிலடி கொடுத்தனர். தொடக்க ஆட்டக்காரர்களான குயின்டான் டி காக்கும், அம்லாவும் ரன் வேட்டை நடத்தினர். எந்த சலனமும் இல்லாத இந்த ஆடுகளத்தில் வங்காளதேச பவுலர்களால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.

உள்ளூர் ரசிகர்களுக்கு விருந்து படைத்த டி காக் 13-வது சதத்தையும், அம்லா 26-வது சதத்தையும் எட்டினர். 7 பவுலர்களை பயன்படுத்தி பார்த்தும் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை.

தென்ஆப்பிரிக்க அணி 42.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 282 ரன்கள் குவித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. குயின்டான் டி காக் 168 ரன்களுடனும் (145 பந்து, 21 பவுண்டரி, 2 சிக்சர்), அம்லா 110 ரன்களுடனும் (112 பந்து, 8 பவுண்டரி) களத்தில் இருந்தனர்.

தென்ஆப்பிரிக்கா புதிய சாதனை

*தென்ஆப்பிரிக்க வீரர்கள் டி காக்கும், அம்லாவும் முதல் விக்கெட்டுக்கு 282 ரன்கள் திரட்டி மலைக்க வைத்தனர். ஒரு விக்கெட்டுக்கு தென்ஆப்பிரிக்க ஜோடி எடுத்த அதிகபட்சம் இதுதான். இதற்கு முன்பு டுமினி-மில்லர் ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 256 ரன்கள் (ஜிம்பாப்வேக்கு எதிராக, 2015-ம் ஆண்டு) எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

* தென்ஆப்பிரிக்க அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி காண்பது இது 7-வது நிகழ்வாகும். அதே சமயம் ஒரு நாள் போட்டி வரலாற்றில் விக்கெட் இழப்பின்றி வெற்றிகரமாக விரட்டிபிடிக்கப்பட்ட (சேசிங்) அதிகபட்ச ஸ்கோர் இது தான். அந்த வகையில் இது புதிய உலக சாதனையாகும். இதற்கு முன்பு இங்கிலாந்து அணி இலங்கைக்கு எதிராக (2016-ம் ஆண்டு) விக்கெட் இழப்பின்றி 256 ரன்கள் எடுத்து வெற்றி கண்டதே சிறந்த சாதனையாக இருந்தது.

*வங்காளதேச ஆல்-ரவுண்டர் ஷகிப் அல்-ஹசன் 29 ரன்களில் ஆட்டம் இழந்தார். முன்னதாக 17 ரன் எடுத்த போது 5 ஆயிரம் ரன்களை கடந்தார். ஒரு நாள் கிரிக்கெட்டில் அவர் இதுவரை 5,012 ரன்களும், 224 விக்கெட்டுகளும் (178 ஆட்டம்) எடுத்துள்ளார். இதன் மூலம் 5 ஆயிரம் ரன் மற்றும் 200 விக்கெட்டுக்கு மேல் எடுத்த 5-வது வீரர் என்ற பெருமையை அல்-ஹசன் பெற்றார். ஏற்கனவே சனத் ஜெயசூர்யா (இலங்கை), அப்ரிடி, அப்துல் ரசாக் (இருவரும் பாகிஸ்தான்), காலிஸ் (தென்ஆப்பிரிக்கா) இச்சாதனையை செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்