லாகூரில் நடக்கும் போட்டியில் இருந்து இலங்கை கேப்டன் தரங்கா விலகல்

லாகூரில் நடக்க உள்ள பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் இருந்து இலங்கை கேப்டன் தரங்கா விலகியுள்ளார்.

Update: 2017-10-17 21:30 GMT
கொழும்பு,

இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பொதுவான இடமான ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது விளையாடி வருகிறது. அதன் பிறகு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரிலும் பங்கேற்கிறது. இதில் முதல் இரு ஆட்டங்கள் அக்டோபர் 26, 27-ந்தேதிகளில் அபுதாபியிலும், கடைசி 20 ஓவர் போட்டி பாகிஸ்தானின் லாகூரிலும் (அக்.29-ந்தேதி) நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே 2009-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சென்று விளையாடிய போது இலங்கை அணி வீரர்கள் சென்ற பஸ் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தினர். அதிர்ஷ்டவசமாக அந்த சம்பவத்தில் வீரர்கள் உயிர் தப்பினர். இந்த அச்சம் இன்னும் இலங்கை வீரர்களை விட்டு அகலவில்லை.

மீண்டும் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடும் மனநிலையில் அவர்கள் இல்லை. தற்போது அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் மற்றும் ஒப்பந்த வீரர்கள் என்று மொத்தம் 40 பேர் பாகிஸ்தானில் விளையாட விரும்பவில்லை என்றும், லாகூர் போட்டியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்றும் இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் இலங்கை கிரிக்கெட் வாரியம் உறுதி அளித்தபடி அங்கு விளையாடுவதற்கு தீவிரம் காட்டி வருகிறது.

இந்த நிலையில் பாதுகாப்பு பிரச்சினையை காரணம் காட்டி லாகூர் போட்டியில் இருந்து இலங்கை கேப்டன் உபுல்தரங்கா விலகியுள்ளார். இதே போல் வேகப்பந்து வீச்சாளர் மலிங்காவும் ஏற்கனவே அந்த போட்டியில் தன்னால் விளையாட இயலாது என்று கூறி விட்டார். சமீபத்தில் உலக லெவன் அணியில் இடம் பிடித்து ஆடிய திசரா பெரேராவை தவிர மற்றவர்கள் பாகிஸ்தானில் கால்பதிக்க தயங்குகிறார்கள்.

லாகூர் ஆட்டத்தில் இருந்து விலகுவதன் மூலம் மற்ற இரு 20 ஓவர் போட்டியிலும் தரங்கா விளையாட முடியாது. ஏனெனில் மூன்று ஆட்டத்திற்கும் ஒரே அணியே தேர்வு செய்யப்படும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் தெளிவுப்படுத்தியுள்ளது. அதனால் அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் குசல் பெரேரா கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது.

இலங்கை அணியின் மேலாளர் குருசிங்கா கூறுகையில், ‘பெரும்பாலான வீரர்களிடம் இலங்கை கிரிக்கெட் வாரியம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த ஆட்டத்தை பார்த்தோம் என்றால் லாகூரில் 24 மணி நேரத்திற்கு குறைவாகவே தங்க வேண்டி இருக்கிறது. அங்கு சென்று விளையாடி விட்டு உடனடியாக தாயகம் திரும்புகிறோம். அதனால் முன்னணி வீரர்கள் வருவார்கள் என்று நம்புகிறேன்’ என்றார்.

மேலும் செய்திகள்