இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: வங்காளதேசம் 110 ரன்னில் சுருண்டது

வங்காளதேசம் – இலங்கை அணிகள் இடையிலான 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டாக்காவில் நேற்று முன்தினம் தொடங்கியது.

Update: 2018-02-09 21:00 GMT

டாக்கா,

வங்காளதேசம் – இலங்கை அணிகள் இடையிலான 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டாக்காவில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட் செய்த இலங்கை அணி 222 ரன்னில் ஆல்–அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய வங்காளதேசம் தொடக்க நாளில் 4 விக்கெட்டுக்கு 54 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் 2–வது நாளான நேற்று தொடர்ந்து பேட் செய்த வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 45.4 ஓவர்களில் 110 ரன்னில் சுருண்டது. அந்த அணி கடைசி 3 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை தாரைவார்த்தது குறிப்பிடத்தக்கது. இலங்கை தரப்பில் லக்மல், அகிலா தனஞ்ஜெயா தலா 3 விக்கெட்டுகளும், தில்ருவான் பெரேரா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

அடுத்து 112 ரன்கள் முன்னிலையுடன் 2–வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி நேற்றைய ஆட்ட நேர இறுதியில் 8 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் சேர்த்துள்ளது. அதிகபட்சமாக ரோ‌ஷன் சில்வா 58 ரன்கள் எடுத்து களத்தில் நிற்கிறார். ஒட்டுமொத்தமாக இலங்கை அணி இதுவரை 312 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்த மைதானத்தில் 300 ரன்களுக்கு மேலான இலக்கை எந்த அணியும் விரட்டிப்பிடித்ததில்லை என்பது நினைவு கூரத்தக்கது. 3–வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.

மேலும் செய்திகள்