பாராட்ட வார்த்தைகள் இல்லை: ‘உலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி’ இந்திய பயிற்சியாளர் ரவிசாஸ்திரி புகழாரம்

இந்திய கேப்டன் விராட் கோலியை பாராட்ட வார்த்தைகளே இல்லை. புதிய ஆங்கில அகராதியை வாங்கி தான் வார்த்தைகளை தேடிப்பிடிக்க வேண்டும்.

Update: 2018-02-17 21:15 GMT

செஞ்சூரியன்,

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி நிருபர்களிடம் கூறியதாவது:–

1992–ம் ஆண்டில் இருந்து நான் தென்ஆப்பிரிக்காவுக்கு வந்திருக்கிறேன். எந்த ஒரு சமயத்திலும் தென்ஆப்பிரிக்க அணியை பலவீனமான அணி என்று யாரும் சொன்னதில்லை. இரு நாட்டு தொடர்களில் அவர்களின் சாதனை விவரங்களை பாருங்கள். இந்த வகை தொடரில் தென்ஆப்பிரிக்கா மிகச்சிறந்த அணிகளில் ஒன்று என்பது தெரியும். டெலிவி‌ஷன் வர்ணனையாளராக இருந்த போது தென்ஆப்பிரிக்க அணியின் நிறைய ஆட்டங்களை பார்த்து இருக்கிறேன். அவர்கள் எப்படி விளையாடுவார்கள் என்பதை அறிவேன். அப்படிப்பட்ட ஒரு அணிக்கு எதிராக கிடைத்த இந்த வெற்றியின் ஒவ்வொரு தருணத்தையும் எங்களது வீரர்கள் உற்சாகமாக கொண்டாட வேண்டும் என்று விரும்புகிறேன். ஏனெனில் தென்ஆப்பிரிக்காவை அவர்களது இடத்தில் வீழ்த்துவது அடிக்கடி நடக்கக்கூடிய வி‌ஷயம் அல்ல.

இந்திய கேப்டன் விராட் கோலியை பாராட்ட வார்த்தைகளே இல்லை. புதிய ஆங்கில அகராதியை வாங்கி தான் வார்த்தைகளை தேடிப்பிடிக்க வேண்டும். ஒரு பேட்ஸ்மேனாக இந்த தொடரில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார் என்பதை பாருங்கள்? வலுவான தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சு தாக்குதலுக்கு எதிராக 6 ஆட்டத்தில் 500 ரன்களுக்கு மேல் குவித்திருக்கிறார் என்றால் வேறு என்ன சொல்வது? வெறும் அவர் பெற்ற சராசரியையோ அல்லது ரன் எடுத்த விதத்தையோ மட்டுமல்லாமல், இந்த ரன்கள் அணியின் வெற்றியில் எத்தகைய பங்களிப்பை அளித்திருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். என்னை பொறுத்தவரை இப்போது உலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி தான்.

முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் தோற்று அதன் பிறகு சரிவில் இருந்து மீண்டு தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வீரர்கள் வெளிப்படுத்தியது வியப்புக்குரியது. எல்லா பெருமையும் கேப்டன் விராட் கோலியை சாரும். ஏனெனில் ரன் குவிப்பிலும், ஆக்ரோ‌ஷமாக வழிநடத்துவதிலும் அணியை நேர்த்தியாக முன்னெடுத்து செல்கிறார். அவர் காட்டும் தீவிரமும், உத்வேகமும் சக வீரர்களையும் அது போல் செயல்பட வைக்கிறது.

இவ்வாறு ரவிசாஸ்திரி கூறினார்.

மேலும் செய்திகள்