இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மீது மனைவி பரபரப்பு புகார்

தன்னை அடித்து துன்புறுத்துகிறார் என முகமது ஷமியின் மனைவி புகார் தெரிவித்துள்ளார்.

Update: 2018-03-07 23:00 GMT
கொல்கத்தா,

‘இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி பல பெண்களுடன் தொடர்பு வைத்து கொண்டு தன்னை அடித்து துன்புறுத்துகிறார்’ என்று அவரது மனைவி ஹசின் ஜஹன் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் முகமது ஷமி. இந்திய அணிக்காக 30 டெஸ்ட், 50 ஒரு நாள் போட்டி மற்றும் 7 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். உத்தரபிரதேசத்தை சேர்ந்த 29 வயதான முகமது ஷமி தற்போது மேற்குவங்காளத்தில் உள்ள கொல்கத்தாவில் வசித்து வருகிறார். முகமது ஷமிக்கும், ஹசின் ஜஹன் என்ற பெண்ணுக்கும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஆயிரா (2½ வயது) என்ற பெண்குழந்தை உள்ளது.

களத்தில் எதிரணி பேட்ஸ்மேன்களை வேகப்பந்து வீச்சால் மிரட்டி வரும் முகமது ஷமியின் இல்வாழ்க்கையில் திடீரென பெரும் புயல் வீசி இருக்கிறது.

முகமது ஷமி குறித்து அவரது மனைவி ஹசின் ஜஹன் ‘பேஸ்புக்’ பக்கத்தில் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். முகமது ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக கூறி இருக்கும் அவர் ஒரு சில பெண்களுடன் ஷமி நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தையும், அந்த பெண்களின் செல்போன் எண்களையும் வெளியிட்டு இருக்கிறார். மேலும் ஆன்-லைனில் முகமது ஷமி பெண்களுடன் காதல் ரசம் சொட்டும் வகையில் உரையாடிய பதிவுகளின் ஆதாரத்தையும் அந்த பதிவில் அம்பலப்படுத்தி உள்ளார்.

இந்த விவகாரம் குறித்து ஹசின் ஜஹன் கூறியதாவது:-
முகமது ஷமியின் குடும்பத்தினர் எல்லோரும் என்னை கொடுமைப்படுத்துகிறார்கள். அவரது தாயார் மற்றும் சகோதரர் என்னை தகாத வார்த்தைகளால் திட்டுகிறார்கள். கடந்த 2 ஆண்டுகளாக இந்த கொடுமையை அனுபவித்து வருகிறேன். சில நாட்களில் அதிகாலை 2 மற்றும் 3 மணி வரை இந்த சித்ரவதை தொடரும். அவர்கள் என்னை கொல்ல கூட முயற்சிக்கிறார்கள். தென்ஆப்பிரிக்க தொடர் முடிந்து நாடு திரும்பிய முகமது ஷமி என்னை தாக்கினார். சில காலமாக இப்படி தான் அவர் மோசமாக நடந்து கொள்கிறார். இதற்கு மேல் என்னால் பொறுத்து கொள்ள முடியாது. அவர் தனது தவறை திருத்தி கொள்ள போதிய கால அவகாசம் கொடுத்தும் அவர் தனது தவறை உணர்ந்து கொள்ளாமல் என் மீது தொடர்ந்து கோபத்தை காட்டுவதுடன், என்னுடைய நலனுக்காக அமைதியாக இருக்கும்படி மிரட்டுகிறார். எனது குடும்பத்துக்காகவும், மகளுக்காகவும் கொடுமைகளை அனுபவித்து கொண்டு இத்தனை நாட்கள் அமைதியாக இருந்தேன்.

முகமது ஷமி ஒரு உல்லாச பிரியர். வெளிநாட்டு தொடருக்கு செல்லும் போதெல்லாம் அவர் சில பெண்களையும் அழைத்து செல்வது வாடிக்கையாகும். ஆனால் இதனை இந்திய கிரிக்கெட் வாரியம் கண்டு கொள்வதில்லை. அவர் பல பெண்களுடன் தொடர்பு வைத்து இருப்பதை அறிந்த பிறகும் என்னால் இனியும் பொறுமையாக இருக்க முடியாது. என்னிடம் இருக்கும் ஆதாரங்களை வைத்து அவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பேன். அதே சமயம் கடைசி மூச்சு இருக்கும் வரை விவகாரத்துக்கு மட்டும் செல்ல மாட்டேன்.இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து ஹசின் ஜஹன் கொல்கத்தா போலீசில் நேற்று முறைப்படி புகார் அளித்தார். இது குறித்து போலீசார் விசாரணையை தொடங்கி இருக்கின்றனர். ஆனால் புகாரில் உள்ள விவரங்களை வெளியிட போலீசார் மறுத்து விட்டனர்.

இதற்கிடையே, தர்மசாலாவில் நடந்து வரும் தியோதர் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய ‘ஏ’ அணிக்காக விளையாடும் முகமது ஷமி தன் மீதான புகாரை மறுத்துள்ளார். அதில், ‘எனது சொந்த வாழ்க்கை குறித்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. மிகப்பெரிய சதி எனக்கு எதிராக உள்ளது. எனது புகழை கெடுக்க நடக்கும் முயற்சி இது. எனது விளையாட்டு வாழ்க்கையை சீர்குலைக்கும் முயற்சி இதுவாகும்’ என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்