இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 215 ரன் இலக்கை சேசிங் செய்து வங்காளதேசம் அசத்தல் வெற்றி

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் வங்காளதேசம் சாதனை படைத்தது.

Update: 2018-03-10 23:30 GMT
கொழும்பு,

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 215 ரன்கள் இலக்கை ‘சேசிங்’ செய்து வங்காளதேசம் சாதனை படைத்தது.

இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய மூன்று அணிகள் இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும். இதன் தொடக்க ஆட்டத்தில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவையும், 2-வது லீக்கில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தையும் வீழ்த்தியது.

இந்த நிலையில் நேற்றிரவு நடந்த 3-வது லீக்கில் இலங்கை-வங்காளதேச அணிகள் சந்தித்தன. மழை தூறல் காரணமாக 15 நிமிடங்கள் தாமதமாக ஆரம்பித்த இந்த ஆட்டத்தில் ‘டாஸ்’ ஜெயித்த வங்காளதேசம் முதலில் இலங்கையை பேட் செய்ய பணித்தது.

இதன்படி முதலில் பேட் செய்த இலங்கை அணிக்கு குணதிலகாவும், குசல் மென்டிசும் முதல் விக்கெட்டுக்கு 56 ரன்கள் (4.3 ஓவர்) சேகரித்து அருமையான தொடக்கம் அமைத்து தந்தனர். குணதிலகா 26 ரன்களில், முஸ்தாபிஜூர் ரகுமானின் பந்து வீச்சில் கிளன் போல்டு ஆனார். அடுத்து வந்த குசல் பெரேரா முந்தைய ஆட்டம் போன்றே வெளுத்து வாங்கினார். அவரும், குசல் மென்டிசும் கைகோர்த்து ரன்ரேட்டை எகிற வைத்தனர்.

அணியின் ஸ்கோர் 141 ரன்களை (13.2 ஓவர்) எட்டிய போது குசல் மென்டிஸ் 57 ரன்களில் (30 பந்து, 2 பவுண்டரி, 5 சிக்சர்) கேட்ச் ஆனார். தொடர்ந்து 2-வது அரைசதத்தை நிறைவு செய்த குசல் பெரேரா தனது பங்குக்கு 74 ரன்கள் (48 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். இறுதிகட்டத்தில் தரங்கா 32 ரன்கள் (15 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) திரட்டி 200 ரன்களை கடக்க வித்திட்டார்.

20 ஓவர் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் குவித்தது. இந்த மைதானத்தில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

அடுத்து இமாலய இலக்கை நோக்கி ஆடிய வங்காளதேச பேட்ஸ்மேன்கள் பதிலடி கொடுத்தனர். தொடக்க ஆட்டக்காரர்களான லிட்டான் தாஸ் 43 ரன்களும் (19 பந்து, 2 பவுண்டரி, 5 சிக்சர்), தமிம் இக்பால் 47 ரன்களும் (29 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) சேர்த்து அட்டகாசமான தொடக்கம் தந்தனர்.

அடுத்து வந்த வீரர்களும், இலங்கை பந்து வீச்சை நொறுக்கியெடுக்க வங்காளதேசத்தின் கை ஓங்கியது. சவும்யா சர்கார் 24 ரன்களும், கேப்டன் மக்முதுல்லா 20 ரன்களும் எடுத்தனர்.

மிடில் வரிசையில் விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம், வங்காளதேச அணிக்கு நம்பிக்கை ஊட்டினார். நெருக்கடிக்கு மத்தியில் நாலாபுறமும் பந்துகளை துரத்தியடித்த அவர், தங்கள் அணி 20 ஓவர் கிரிக்கெட்டில் முதல்முறையாக 200 ரன்களை தொடுவதற்கு வழிவகுத்தார். இதற்கிடையே சபிர் ரகுமான் (0) ரன்-அவுட் ஆனார்.

கடைசி ஓவரில் வங்காளதேச அணியின் வெற்றிக்கு 9 ரன் தேவைப்பட்டது. பரபரப்பான 20-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் திசரா பெரேரா வீசினார். முதல் பந்தில் 2 ரன்னும், 2-வது பந்தில் பவுண்டரியும், 3-வது பந்தில் 2 ரன்னும் எடுத்த முஷ்பிகுர் ரஹிம், 4-வது பந்தில் மேலும் ஒரு ரன் எடுத்து வெற்றிக்கனியை பறித்தார்.

வங்காளதேச அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பெற்றது. 20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் வங்காளதேச அணி விரட்டிப்பிடித்த அதிகபட்ச இலக்கு (சேசிங்) இது தான். முஷ்பிகுர் ரஹிம் 74 ரன்களுடன் (35 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்) கடைசி வரை களத்தில் இருந்தார்.

நாளை நடக்கும் அடுத்த லீக் ஆட்டத்தில் இந்தியா- இலங்கை அணிகள் மோதுகின்றன.

மேலும் செய்திகள்