டெஸ்ட் பந்து வீச்சாளர் தரவரிசை: மீண்டும் முதலிடத்தை பிடித்தார், ரபடா

பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் காஜிசோ ரபடா ஒரு இடம் முன்னேறி மீண்டும் ‘நம்பர் ஒன்’ அரியணையில் ஏறியுள்ளார்.

Update: 2018-03-13 23:15 GMT
துபாய், 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் டாப்-6 இடங்களில் மாற்றம் இல்லை. ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் முதலிடத்தில் (943 புள்ளி) நீடித்தாலும் 4 புள்ளிகளை இழந்துள்ளார். இந்திய கேப்டன் விராட் கோலி 2-வது இடத்தில் (912 புள்ளி) தொடருகிறார்.

பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் காஜிசோ ரபடா ஒரு இடம் முன்னேறி மீண்டும் ‘நம்பர் ஒன்’ அரியணையில் ஏறியுள்ளார். போர்ட்எலிசபெத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் 11 விக்கெட்டுகளை அள்ளியதன் மூலம் இந்த ஏற்றம் அவருக்கு கிடைத்துள்ளது. தரவரிசையில் அவர் மொத்தம் 902 புள்ளிகளை பெற்று இருக்கிறார். பிலாண்டர், ஷான் பொல்லாக், ஸ்டெயின் ஆகியோருக்கு பிறகு 900 புள்ளிகளை கடந்த தென்ஆப்பிரிக்க பவுலர் இவர் தான். ஆனால் களத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி இரு டெஸ்டுகளில் விளையாட ரபடாவுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் 2-வது இடமும் (887 புள்ளி), இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா (844 புள்ளி) 3-வது இடமும், அஸ்வின் 4-வது இடமும் (803 புள்ளி) வகிக்கிறார்கள்.

மேலும் செய்திகள்