உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று: ஆப்கானிஸ்தானிடம் வீழ்ந்தது வெஸ்ட் இண்டீஸ்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்றில் ஆப்கானிஸ்தானிடம் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வி அடைந்தது.

Update: 2018-03-15 21:45 GMT
ஹராரே,

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்றில் ஆப்கானிஸ்தானிடம் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வி அடைந்தது.

ஆப்கானிஸ்தான் வெற்றி

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று போட்டி ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் முடிவில் 6 அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றை எட்டின. இந்த நிலையில் சூப்பர் சிக்ஸ் சுற்றின் முதலாவது ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆப்கானிஸ்தானை சந்தித்தது. இதில் ஆப்கானிஸ்தானின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய வெஸ்ட் இண்டீஸ் அணியால் 8 விக்கெட்டுக்கு 197 ரன்களே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக ஷாய் ஹோப் 43 ரன்கள் எடுத்தார். கிறிஸ் கெய்ல் ஒரு ரன்னில் கிளன் போல்டு ஆனார். ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்கள் முஜீப் ரகுமான் 3 விக்கெட்டுகளும், முகமது நபி 2 விக்கெட்டுகளும், ரஷித்கான் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார். ஒரு நாள் போட்டியில் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் ஆப்கானிஸ்தான் வீரர் சிறப்பை முகமது நபி (95 ஆட்டத்தில் 101 விக்கெட்) நேற்று பெற்றார்.

தொடர்ந்து ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 47.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிக்கனியை பறித்தது. ரக்மத் ஷா 68 ரன்கள் எடுத்து வெற்றிக்கு பக்கபலமாக இருந்தார். அதிர்ச்சி தோல்வி கண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்து ஜிம்பாப்வேயை வருகிற 19-ந்தேதி எதிர்கொள்கிறது.

புலவாயோவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் ஸ்காட்லாந்து-ஐக்கிய அரபு அமீரக அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஸ்காட்லாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ கிராஸ் (114 ரன்) சதம் விளாசினார். அடுத்து களம் இறங்கிய ஐக்கிய அமீரக அணி 47.4 ஓவர்களில் 249 ரன்களுக்கு ஆட்டம் இழந்து 73 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இன்றைய சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் ஜிம்பாப்வே-அயர்லாந்து அணிகள் மோதுகின்றன.

நேபாளத்துக்கு ஒரு நாள் போட்டி அந்தஸ்து

சூப்பர்சிக்ஸ் வாய்ப்பை இழந்து பிளே-ஆப் சுற்றில் விளையாடி வரும் நேபாள அணி நேற்றைய ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பப்புவா நியூ கினியாவை தோற்கடித்தது. இதையடுத்து நேபாள அணி, முதல்முறையாக சர்வதேச ஒரு நாள் போட்டி அந்தஸ்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) இருந்து பெற்றது. அதே சமயம் தகுதி சுற்றில் தொடர்ந்து மோசமான தோல்விகளை தழுவிய பப்புவா நியூ கினியா, ஹாங்காங் அணிகள் ஒரு நாள் போட்டி அந்தஸ்தை இழந்தன.

மேலும் செய்திகள்