நியூசிலாந்துக்கு எதிரான பகல்-இரவு டெஸ்ட்: இங்கிலாந்து 58 ரன்னில் சுருண்டது

பவுல்ட், சவுதி மிரட்டல் பந்து வீச்சில் இங்கிலாந்து 58 ரன்னில் சுருண்டது.

Update: 2018-03-22 23:00 GMT
ஆக்லாந்து,

நியூசிலாந்துக்கு எதிரான பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட்டில் டிரென்ட் பவுல்ட், டிம் சவுதி ஆகியோரின் புயல்வேக பந்து வீச்சில் சீர்குலைந்து போன இங்கிலாந்து அணி 58 ரன்னில் சுருண்டது.

நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (பகல்-இரவு) ஆக்லாந்தில் உள்ள ஈடன்பார்க் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. நியூசிலாந்து மண்ணில் நடக்கும் முதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டி இது தான்.

இதில் ‘டாஸ்’ ஜெயித்த நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து வீரர்கள் முதல் ஓவரில் இருந்தே பயங்கரமாக திணறினர். மேகமூட்டமான சீதோஷ்ண நிலையில், டிரென்ட் பவுல்ட்டும், டிம் சவுதியும் துல்லியமாக தொடுத்த ‘ஸ்விங்’ தாக்குதலை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்தின் விக்கெட்டுகள் கொத்து கொத்தாக சரிந்தன. வெறும் 27 ரன்களுக்குள் 9 விக்கெட்டுகளை பறிகொடுத்து மிக மோசமான நிலையில் தத்தளித்தது. இறுதிகட்டத்தில் கிரேக் ஓவர்டான் (33 ரன், நாட்-அவுட்) கொஞ்சம் தாக்குப்பிடித்து தங்கள் அணி 50 ரன்களை கடக்க உதவினார்.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 20.4 ஓவர்களில் 58 ரன்னில் சுருண்டது. கேப்டன் ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோ, மொயீன் அலி, ஸ்டூவர்ட் பிராட் ஆகிய 5 வீரர்கள் டக்-அவுட் ஆனார்கள். முன்னாள் கேப்டன் அலஸ்டயர் குக் 5 ரன்னில் கேட்ச் ஆனார். நியூசிலாந்துக்கு எதிராக இங்கிலாந்து அணியின் மோசமான ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு 1978-ம் ஆண்டு வெலிங்டனில் நடந்த டெஸ்டில் 64 ரன்கள் எடுத்ததே குறைந்த ஸ்கோராகும். ஒட்டுமொத்தத்தில் இங்கிலாந்தின் 6-வது குறைந்த ஸ்கோராக இது பதிவானது.

நியூசிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் டிரென்ட் பவுல்ட், டிம் சவுதி ஆகியோர் மட்டுமே பந்து வீசினர். ஒரு இன்னிங்சில் எதிரணியை இரண்டு பவுலர்கள் மட்டுமே பயன்படுத்தி சுருட்டியது நியூசிலாந்துக்கு இதுவே முதல் அனுபவமாகும். டிரென்ட் பவுல்ட் 32 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார். இது அவரது சிறந்த பந்து வீச்சாகும். டிம் சவுதி 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி ஆட்ட நேர முடிவில் 69 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 175 ரன்கள் சேர்த்து நல்ல நிலையை எட்டியுள்ளது. 18-வது சதத்தை நெருங்கியுள்ள கேப்டன் கனே வில்லியம்சன் 91 ரன்களுடனும் (177 பந்து, 10 பவுண்டரி, ஒரு சிக்சர்), ஹென்ஹி நிகோல்ஸ் 24 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். முன்னதாக ஜீத் ரவல் (3 ரன்), டாம் லாதம் (26 ரன்), ராஸ் டெய்லர் (20 ரன்) ஆகியோர் ஆட்டம் இழந்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது.

ஸ்டூவர்ட் பிராட் 400 விக்கெட் வீழ்த்தி சாதனை

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டுவர்ட் பிராட், நியூசிலாந்து வீரர் டாம் லாதமின் விக்கெட்டை சாய்த்தார். இது அவரது 400-வது (115 டெஸ்ட்) டெஸ்ட் விக்கெட் ஆகும். இந்த மைல்எல்லை எட்டிய 15-வது வீரர், இங்கிலாந்து அளவில் 2-வது வீரர் என்ற சிறப்பை பிராட் பெற்றார். இங்கிலாந்து தரப்பில் ஏற்கனவே ஜேம்ஸ் ஆண்டர்சன் 525 விக்கெட்டுகள் (135 டெஸ்ட்) கைப்பற்றி இருக்கிறார். அதே சமயம் 400 விக்கெட்டுகளை குறைந்த வயதில் எட்டிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் தான். அவரது வயது 31 ஆண்டு 271 நாட்கள். இதற்கு முன்பு தென்ஆப்பிரிக்காவின் ஸ்டெயின் (32 ஆண்டு 33 நாட்களில்) இந்த பெருமையை தக்க வைத்திருந்தார்.

மேலும் செய்திகள்