ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தென்ஆப்பிரிக்க அணி 401 ரன்கள் முன்னிலை

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணி 401 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையை எட்டியிருக்கிறது.

Update: 2018-04-01 22:45 GMT
ஜோகன்னஸ்பர்க்,

கடைசி டெஸ்ட்

ஆஸ்திரேலியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்கா 488 ரன்கள் குவித்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 2-வது நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 110 ரன்களுடன் பரிதவித்தது.

பாலோ-ஆன் ஆபத்தை தவிர்க்க மேற்கொண்டு 179 ரன்கள் சேர்க்க வேண்டிய நெருக்கடியுடன் 3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி உணவு இடைவேளைக்கு பிறகு 221 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி பாலோ-ஆன் ஆனது. கம்மின்ஸ் (50 ரன்), கேப்டன் டிம் பெய்ன் (62 ரன்) அரைசதம் அடித்தனர். தென்ஆப்பிரிக்கா தரப்பில் பிலாண்டர், ரபடா, கேஷவ் மகராஜ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தென்ஆப்பிரிக்கா

401 ரன் முன்னிலை

ஆஸ்திரேலிய அணிக்கு ‘பாலோ-ஆன்’ வாய்ப்பு வழங்காத தென்ஆப்பிரிக்க அணி 267 ரன்கள் முன்னிலையுடன் தொடர்ந்து 2-வது இன்னிங்சை விளையாடியது. நேற்றைய முடிவில் அந்த அணி மார்க்ராம் (37 ரன்), அம்லா (16 ரன்), டிவில்லியர்ஸ் (6 ரன்) ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் எடுத்துள்ளது. டீன் எல்கர் (39 ரன்), கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் (34 ரன்) களத்தில் உள்ளனர்.

தென்ஆப்பிரிக்க அணி இதுவரை 401 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையை எட்டியிருக்கிறது. 4-வது நாளான இன்று அந்த அணி மெகா ஸ்கோரை இலக்காக நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணிக்கே வெற்றி வாய்ப்பும் பிரகாசமாக தெரிகிறது.

இதற்கிடையே, தனது கடைசி சர்வதேச போட்டியில் ஆடும் தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் இடது விலாபகுதியில் காயமடைந்துள்ளார். இதனால் 2-வது இன்னிங்சில் அவர் பந்து வீசுவது சந்தேகமாகியுள்ளது.

மேலும் செய்திகள்