கிரிக்கெட்
வெஸ்ட்இண்டீசில் நடைபெறும் சி.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஸ்டீவன் சுமித் பங்கேற்பு

வெஸ்ட்இண்டீசில் நடைபெறும் சி.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஸ்டீவன் சுமித் பங்கேற்க உள்ளார்.
டிரினிடாட்,

கடந்த மார்ச் மாதத்தில் கேப்டவுனில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய ஆஸ்திரேலிய அணியின் வீரர் ஸ்டீவன் சுமித்துக்கு அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் ஒரு ஆண்டு விளையாட தடை விதித்தது. இருப்பினும் உள்ளூர் குறைந்த தர போட்டி மற்றும் வெளிநாட்டு லீக் போட்டிகளில் விளையாட அவருக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை. இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு மீண்டும் திரும்பும் நோக்கில் ஸ்டீவன் சுமித் சமீபத்தில் கனடாவில் நடந்த குளோபல் 20 ஓவர் லீக் போட்டியில் விளையாடினார்.

இந்த நிலையில் வெஸ்ட்இண்டீசில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 8-ந் தேதி தொடங்கும் கரிபியன் பிரீமியர் லீக் (சி.பி.எல்.) 20 ஓவர் போட்டியில் ஸ்டீவன் சுமித் விளையாடுகிறார். இதற்காக அவர் பார்படோஸ் டிரைடென்ட்ஸ் அணியில் விளையாட ஒப்பந்தமாகி இருக்கிறார். 2013-ம் ஆண்டுக்கு பிறகு ஸ்டீவன் சுமித் முதல் முறையாக இந்த லீக் போட்டியில் விளையாட இருக்கிறார். இந்த போட்டியில் கடந்த ஆண்டு பார்படோஸ் டிரைடென்ட்ஸ் அணிக்காக ஆடிய வங்காளதேச அணியின் ஆல்-ரவுண்டர் ஷகிப் அல்-ஹசன் இந்த சீசனில் விளையாடவில்லை.

அவருக்கு வங்காளதேச கிரிக்கெட் வாரியம் அனுமதி அளிக்க மறுத்து விட்டது. ஷகிப் அல்-ஹசனுக்கு பதிலாக ஸ்டீவன் சுமித் அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். இதேபோல் பந்து வீச்சு சேத சர்ச்சையில் சிக்கி ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னரும் இந்த போட்டியில் களம் காணுகிறார். அவர் செயின்ட் லூசியா ஸ்டார்ஸ் அணியில் ஆஸ்திரேலிய வீரர் டார்சி ஷார்ட்டுக்கு பதிலாக இடம் பிடித்துள்ளார்.