கிரிக்கெட்
நெல்லையில் நடந்த டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது

நெல்லையில் நடந்த டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை,

3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் 3 இடங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் நெல்லையில் 2 ஆட்டங்கள் நடந்தன. இரவு நடந்த 2-வது ஆட்டத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி, காரைக்குடி அணியை வீழ்த்தி 4-வது வெற்றியை ருசித்தது. இந்த போட்டியின்போது, வட மாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள் சிலர் பார்வையாளர்கள் கேலரியில் அமர்ந்து இருந்தனர். அவர்கள், போட்டி நடந்து கொண்டிருந்தபோது, பார்வையாளர்களிடம் ரூ.100 கட்டணம் வசூலித்து கொண்டு, பவுண்டரி அடித்தால் ரூ.500 மற்றும் சிக்சர் அடித்தால் ரூ.1,000 வழங்கப்படும் என்று கூறி, சூதாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தாழையூத்து போலீசில் புகார் செய்யப்பட்டது. உடனே துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னரசு, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது வடமாநில இளைஞர்கள், கிரிக்கெட் ரசிகர்களிடம் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நித்தியானந்த் (வயது 37), மகேஷ் சர்மா (26), சுனில் ஷெட்டர் (30), ஜெர்லால் (27), அபே (37), மத்தியபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஜெயிந்த் (26), அரியானா மாநிலத்தைச் சேர்ந்த கோரத் (26), ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மோகிந்த் (42), உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முகமது அபின் (32) ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.13 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது.