இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் மோதும் முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் இன்று தொடங்குகிறது.

Update: 2018-10-03 23:45 GMT
ராஜ்கோட்,

ஜாசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு வந்துள்ளது. இதன்படி இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

இங்கிலாந்துக்கு சென்று டெஸ்ட் தொடரில் 1-4 என்ற கணக்கில் உதை வாங்கிய இந்திய அணி மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்புவதில் முனைப்பு காட்டி வருகிறது. சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் இந்திய அணி, போதிய அனுபவம் இல்லாத வெஸ்ட் இண்டீசை எளிதில் வீழ்த்தி விடும் என்பதே நிபுணர்களின் கணிப்பாகும். உள்ளூரில் தொடர்ச்சியாக 9 டெஸ்ட் தொடர்களை கைப்பற்றி முத்திரை பதித்துள்ள இந்திய அணி, அந்த எண்ணிக்கையை 10 ஆக உயர்த்தும் ஆவலில் இருக்கிறது. கேப்டன் விராட் கோலி, புஜாரா, ரஹானே, லோகேஷ் ராகுல் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். அஸ்வினும், ரவீந்திர ஜடேஜாவும் சுழலில் மிரட்ட காத்திருக்கிறார்கள்.

வழக்கமாக போட்டி தொடங்குவதற்கு முன்பாகத்தான் ஆடும் இந்திய லெவன் அணி தெரிய வரும். ஆனால் ஆச்சரியம் அளிக்கும் வகையில் இந்த டெஸ்டுக்கு முந்தையநாளே 12 பேர் கொண்ட வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மயங்க் அகர்வால், ஹனுமா விஹாரி, முகமது சிராஜ் ஆகியோர் நீக்கப்பட்டு விட்டனர். இதன் மூலம் 18 வயதான மும்பை பேட்ஸ்மேன் பிரித்வி ஷா டெஸ்டில் அறிமுக தொடக்க வீரராக இடம்பிடிப்பது உறுதியாகியுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணியை பொறுத்தவரை அந்த அணியில் இடம் பிடித்துள்ள 15 வீரர்களில் 5 பேர் மட்டுமே இதற்கு முன்பு இந்தியாவில் டெஸ்டில் விளையாடிய அனுபவம் வாய்ந்தவர்கள். கேப்டன் ஜாசன் ஹோல்டர் கூட இனிதான் முதல் முறையாக இந்திய மண்ணில் டெஸ்டில் விளையாட இருக்கிறார். 2012-ம் ஆண்டுக்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணி பெரிய அணிகளுக்கு எதிரான தொடர்களை வென்றதில்லை.

பேட்டிங்கில் கிரேக் பிராத்வெய்ட், ரோஸ்டன் சேஸ், கீரன் பவெல், ஷாய் ஹோப் ஆகியோரைத் தான் அந்த அணி மலைபோல் நம்பி இருக்கிறது. பந்து வீச்சில் கேப்டன் ஹோல்டர், தேவந்திர பிஷூ, கேப்ரியல் சிறப்பாக செயல்படக்கூடியவர்கள். ஒருங்கிணைந்து ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே வெஸ்ட் இண்டீஸ் அணியால், இந்தியாவின் சவாலை சமாளிக்க முடியும்.

வெஸ்ட் இண்டீஸ் அணி கடைசியாக 2002-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை தங்களது சொந்த மண்ணில் வென்று இருந்தது. அந்த சமயத்தில் அந்த அணியில் பிரையன் லாரா, சந்தர்பால், கெய்ல், சர்வான், கார்ல் ஹூப்பர் போன்ற ஜாம்பவான்கள் இடம் பெற்று இருந்தனர். அதன் பிறகு இந்தியாவுடன் தொடர்ச்சியாக 6 டெஸ்ட் தொடர்களை பறிகொடுத்து இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி, தற்போது தொடரை டிரா செய்தாலே பெரிய விஷயமாக இருக்கும். இதே போல் அந்த அணி இந்திய மண்ணில் 1994-ம் ஆண்டுக்கு பிறகு டெஸ்டில் வெற்றி கண்டதில்லை.

மொத்தத்தில் ‘நம்பர் ஒன்’ அணியான இந்தியாவுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி கடுமையாக மல்லுகட்டுமா? அல்லது சரண் அடையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜாசன் ஹோல்டர் நிருபர்களிடம் கூறுகையில், ‘இது மிகப்பெரிய சவாலாகும். அதை எதிர்கொள்வதற்கு ஒவ்வொருவரும் தயாராக உள்ளோம். கடந்த சில ஆண்டுகளாக நாங்கள் முன்னணி அணிகளுக்கு நெருக்கடி கொடுத்து இருக்கிறோம். தற்போதைய வீரர்கள் அதை செய்துள்ளனர். இந்திய மண்ணில் ஆடும் போது பொறுமையாக செயல்படுவது மிகவும் முக்கியமானதாகும். தரமான பந்து வீச்சுக்கு எதிராக எப்படி ரன்கள் சேர்ப்பது என்பது குறித்து ஆலோசித்து இருக்கிறோம். ஒவ்வொரு வீரர்களும் அதற்குரிய திட்டங்களை வகுத்துள்ளனர். நிதானம் காட்ட வேண்டும், அதே வேளையில் ஏதுவான பந்துகளில் ரன் எடுக்கும் வாய்ப்பை தவற விடக்கூடாது’ என்றார்.

போட்டி நடக்கும் ராஜ்கோட்டில் இதற்கு முன்பு ஒரே ஒரு டெஸ்ட மட்டுமே நடந்துள்ளது. 2016-ம் ஆண்டு நடந்த இந்தியா-இங்கிலாந்து இடையிலான அந்த டெஸ்ட் போட்டி டிரா ஆனது. அந்த டெஸ்டில் 6 சதங்கள் அடிக்கப்பட்டன.

இந்த ஆடுகளம் முதல் இரண்டரை நாட்கள் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் அடுத்து வரும் ஆஸ்திரேலிய தொடரை கருத்தில் கொண்டு ஓரளவு ‘பவுன்ஸ்’ ஆகும் வகையில் ஆடுகளம் உருவாக்கப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் சுழற்பந்து வீச்சின் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கும் என்பதை பார்க்கவே சுவாரஸ்யமாக இருக்கும்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: லோகேஷ் ராகுல், பிரித்வி ஷா, புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, ரிஷாப் பான்ட் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ் அல்லது ஷர்துல் தாகூர்.

வெஸ்ட் இண்டீஸ்: கிரேக் பிராத்வெய்ட், கீரன் பவெல், ஷாய் ஹோப், சுனில் அம்ப்ரிஸ், ஷிம்ரோன் ஹெடிம்யேர், ரோஸ்டன் சேஸ், ஷேன் டாவ்ரிச் (விக்கெட் கீப்பர்), ஜாசன் ஹோல்டர் (கேப்டன்), ஷனோன் கேப்ரியல், தேவேந்திர பிஷூ, கீமோ பால்.

சாதனை துளிகள்

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இதுவரை 94 டெஸ்ட் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 18-ல் இந்தியாவும், 30-ல் வெஸ்ட் இண்டீசும் வெற்றி பெற்றுள்ளன. 46 போட்டி ‘டிரா’வில் முடிந்துள்ளது. இவற்றில் இருந்து சில சாதனை விவரங்கள் வருமாறு:-

அணி அதிகபட்சம்: இந்தியா-644/7 டிக்ளேர் (கான்பூர், 1979-ம் ஆண்டு), வெஸ்ட் இண்டீஸ்- 644/8 டிக்ளேர்(டெல்லி, 1959)

குறைந்தபட்சம்: இந்தியா-75 ரன் (டெல்லி, 1987), வெஸ்ட் இண்டீஸ்-103 ரன் (கிங்ஸ்டன், 2006)

அதிக ரன்கள் குவித்தவர்: சுனில் கவாஸ்கர் (இந்தியா)- 2,749 ரன் (27 டெஸ்ட்), கிளைவ் லாயிட் (வெஸ்ட் இண்டீஸ்)-2,344 ரன் (28)

அதிக சதங்கள் விளாசியவர்: கவாஸ்கர் (இந்தியா)-13 சதம், கேரி சோபர்ஸ், விவியன் ரிச்சர்ட்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்)- தலா 8 சதம்

தனிநபர் அதிகபட்சம்: ரோகன் கன்ஹாய் (வெஸ்ட் இண்டீஸ்)- 256 ரன் (கொல்கத்தா, 1958), கவாஸ்கர் (இந்தியா)-236* ரன் (சென்னை, 1983).

அதிக விக்கெட்டுகள்: கபில்தேவ் (இந்தியா)-89 விக்கெட் (25 டெஸ்ட்), மால்கம் மார்ஷல் (வெஸ்ட் இண்டீஸ்)- 76 விக்கெட் (17).


மேலும் செய்திகள்