ரஞ்சி கிரிக்கெட்: மத்திய பிரதேச அணி 393 ரன்கள் குவித்து ‘ஆல்-அவுட்’

ரஞ்சி கிரிக்கெட்போட்டியில், மத்திய பிரதேச அணி 393 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.

Update: 2018-11-02 23:34 GMT
திண்டுக்கல்,

ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழகத்திற்கு எதிரான ஆட்டத்தில் மத்திய பிரதேச அணி 393 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. தமிழக வேகப்பந்து வீச்சாளர் முகமது ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார்.

85-வது ரஞ்சி கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் பல்வேறு நகரங்களில் தொடங்கியது. இதில் பங்கேற்றுள் 37 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.

தமிழ்நாடு- மத்திய பிரதேச அணிகள் இடையிலான லீக் ஆட்டம் (பி பிரிவு) நத்தத்தில் (திண்டுக்கல்) நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த மத்திய பிரதேச அணி தொடக்க நாளில் 3 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்திருந்தது. 2-வது நாளான நேற்று தொடர்ந்து பேட் செய்த அந்த அணி ஒரு கட்டத்தில் 4 விக்கெட்டுக்கு 359 ரன்களுடன் வலுவான நிலையில் காணப்பட்டது. அதன் பிறகு இரட்டை சதத்தை நெருங்கிய ரஜத் படிதர் (196 ரன்) உள்பட 3 வீரர்களை வேகப்பந்து வீச்சாளர் முகமது வரிசையாக வீழ்த்த (ஹாட்ரிக்) அந்த அணி முதல் இன்னிங்சில் 393 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. தமிழகம் தரப்பில் அஸ்வின், ‘உள்ளூர் ஹீரோ’ முகமது தலா 4 விக்கெட்டுகளை சாய்த்தனர். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தமிழக அணி நேற்று வீசப்பட்ட 2 ஓவரில் ரன் ஏதும் எடுக்கவில்லை.

டேராடூனில் நடந்த பீகார்-உத்தரகாண்ட் அணிகள் (பிளேட் பிரிவு) இடையிலான ஆட்டம் 2-வது நாளில் முடிவுக்கு வந்தது. 18 ஆண்டுகளுக்கு பிறகு ரஞ்சி கிரிக்கெட் போட்டிக்கு திரும்பிய பீகார் அணி முதல் இன்னிங்சில் 60 ரன்னில் சுருண்டது. அடுத்து களம் இறங்கிய உத்தரகாண்ட் அணி முதல் இன்னிங்சில் 227 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தது. 167 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய பீகார் அணி 50.5 ஓவர்களில் 169 ரன்களில் முடங்கியது.

இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 3 ரன் இலக்கை, உத்தரகாண்ட் அணி முதல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரு இன்னிங்சையும் சேர்த்து உத்தரகாண்ட் வேகப்பந்து வீச்சாளர் தீபக் தோபோலா 9 விக்கெட்டுகளை அள்ளினார்.

ஜெய்ப்பூரில் நடந்து வரும் ஜம்மு-காஷ்மீருக்கு எதிரான ஆட்டத்தில் (சி பிரிவு) ராஜஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 379 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. விக்கெட் கீப்பர் சேத்தன் பிஸ்ட் 159 ரன்கள் விளாசினார். ஜம்மு-காஷ்மீர் வேகப்பந்து வீச்சாளர் 30 வயதான முகமது முதாசிர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதில் அவர் தொடர்ச்சியாக 4 பந்துகளில் 4 வீரர்களை எல்.பி.டபிள்யூ. ஆக்கி சாதனை படைத்ததும் அடங்கும். ரஞ்சி வரலாற்றில் ஒரு பவுலர் தொடர்ந்து 4 விக்கெட்டுகளை வீழ்த்துவது இது 2-வது முறையாகும். அதே சமயம் 4 வீரர்களையும் தொடர்ந்து எல்.பி.டபிள்யூ., முறையில் ஒருவர் சாய்ப்பது கிரிக்கெட்டில் இதுவே முதல் நிகழ்வாகும்.

பின்னர் தங்களது முதல் இன்னிங்சை ஆடிய ஜம்மு-காஷ்மீர் அணி 2-வது நாள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்துள்ளது.

மேலும் செய்திகள்