நியூசிலாந்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட்டிலும் பாகிஸ்தான் அணி வெற்றி

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

Update: 2018-11-05 23:00 GMT
துபாய்,

நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி துபாயில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பாபர் அசாம் 79 ரன்னும் (58 பந்துகளில் 7 பவுண்டரி, 2 சிக்சருடன்), முகமது ஹபீஸ் ஆட்டம் இழக்காமல் 53 ரன்னும் (34 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன்) சேர்த்தனர்.

இந்த போட்டியில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் 48 ரன்களை எட்டிய போது சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 1,000 ரன்களை கடந்தார். இதன் மூலம் வேகமாக 1,000 ரன்னை எட்டிப்பிடித்த வீரர் என்ற சாதனையை பாபர் அசாம் படைத்தார். அவர் 26 போட்டிகளில் இந்த இலக்கை எட்டினார். இதற்கு முன்பு இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி 27 போட்டிகளில் 1,000 ரன்களை கடந்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை பாபர் அசாம் தகர்த்தார்.

பின்னர் 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய நியூசிலாந்து அணியின் விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன. 16.5 ஓவர்களில் நியூசிலாந்து அணி 119 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இதனால் பாகிஸ்தான் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கேப்டன் கனே வில்லியம்சன் 60 ரன்னும் (38 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்சருடன்), பிலிப்ஸ் 26 ரன்னும், இஷ்சோதி ஆட்டம் இழக்காமல் 11 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டம் இழந்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் ஷதாப் கான் 3 விக்கெட்டும், வாகஸ் மசூத், இமாத் வாசிம் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். பாகிஸ்தான் வீரர்கள் பாபர் அசாம் ஆட்டநாயகன் விருதையும், முகமது ஹபீஸ் தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.

இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி 20 ஓவர் போட்டி தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. பாகிஸ்தான் அணி தொடர்ச்சியாக கைப்பற்றிய 11-வது 20 ஓவர் போட்டி தொடர் இதுவாகும்.

இதனை அடுத்து நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையே 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடர் நடைபெறுகிறது. இதில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் நாளை (புதன்கிழமை) மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய் கிறது.

மேலும் செய்திகள்