இந்தியாவிடம் ரூ.447 கோடி இழப்பீடு கேட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் வேண்டுகோளை நிராகரித்தது, ஐ.சி.சி.

இரு தரப்பு போட்டி தொடரில் விளையாட மறுத்ததற்காக இந்தியா ரூ.447 கோடி இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விடுத்த வேண்டுகோளை ஐ.சி.சி. நிராகரித்தது.

Update: 2018-11-20 21:45 GMT

துபாய், 

இரு தரப்பு போட்டி தொடரில் விளையாட மறுத்ததற்காக இந்தியா ரூ.447 கோடி இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விடுத்த வேண்டுகோளை ஐ.சி.சி. நிராகரித்தது.

ரூ.447 கோடி இழப்பீடு வேண்டுகோள்

2008–ம் ஆண்டு மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பிறகு இந்தியா–பாகிஸ்தான் அணிகள் இடையே இரு தரப்பு நேரடி கிரிக்கெட் போட்டி தொடருக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை. இதனால் இரு தரப்பு இடையிலான போட்டி தொடரில் பாகிஸ்தானுடன் விளையாட இந்திய அணி மறுத்து வருகிறது.

இதற்கிடையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இந்திய கிரிக்கெட் வாரியம் மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி) புகார் மனு அளித்தது அந்த புகாரில், ‘2015 முதல் 2023–ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் பாகிஸ்தான் அணியுடன் 6 போட்டி தொடரில் விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் 2014–ம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. இதன்படி 2015–ம் ஆண்டு இறுதிக்குள் இந்திய அணி எங்களுடன் 2 போட்டி தொடரில் விளையாடி இருக்க வேண்டும். ஆனால் இந்த ஒப்பந்தத்தை மதித்து இந்திய அணி இதுவரை எங்களுடன் மோதவில்லை. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை சரிகட்ட இந்திய கிரிக்கெட் வாரியம் தங்களுக்கு ரூ.447 கோடி இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

தீர்ப்பாய கமிட்டி விசாரணை

இந்த விவகாரத்துக்கு முடிவு காண மைக்கேல் பெலோப் தலைமையிலான 3 பேர் கொண்ட தீர்ப்பாய கமிட்டி விசாரணைக்கு ஐ.சி.சி. உத்தரவிட்டது. இந்த கமிட்டி இரு தரப்பினரிடமும் 3 நாட்கள் விசாரணை நடத்தியது. முன்னாள் மத்திய வெளியுறவு துறை மந்திரி சல்மான் குர்ஷித் உள்பட சிலரிடம் குறுக்கு விசாரணை செய்யப்பட்டது.

‘பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புரிந்துணர்வு ஒப்பந்தம் என்று சொல்வது திட்ட முன்மொழிதல் கடிதம் தான். அந்த திட்ட கடிதம் எங்களை கட்டுப்படுத்தாது. அதற்காக இழப்பீடு வழங்க வேண்டிய அவசியமும் இல்லை’ என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும் மத்திய அரசு அனுமதி அளித்தால் தான் பாகிஸ்தானுடன் இரு தரப்பு போட்டியில் இந்திய அணி விளையாட முடியும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.

ஐ.சி.சி. நிராகரித்தது

இந்த நிலையில் இழப்பீடு விவகாரம் குறித்த விசாரணையின் 26 பக்க தீர்ப்பு ஐ.சி.சி.யின் அதிகாரபூர்வ டுவிட்டரில் நேற்று வெளியிடப்பட்டது. அதில் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு எதிரான பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இழப்பீடு வேண்டுகோள் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய முடியாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியமும், வருத்தமும், ஏமாற்றமும் அளிப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் கருத்து தெரிவித்துள்ளன.

மேலும் செய்திகள்