ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் 287 ரன் இலக்கு: இந்திய அணி தோல்வியை தவிர்க்குமா?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணிக்கு 287 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Update: 2018-12-18 00:24 GMT
பெர்த்,

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 287 ரன் வெற்றி இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 2-வது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை இழந்து தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெர்த்தில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே ஆஸ்திரேலிய அணி 326 ரன்னும், இந்திய அணி 283 ரன்னும் எடுத்தன.

43 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் 48 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்து இருந்தது. உஸ்மான் கவாஜா 41 ரன்னுடனும், கேப்டன் டிம் பெய்ன் 8 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

4-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. உஸ்மான் கவாஜா, டிம் பெய்ன் ஆகியோர் தொடர்ந்து ஆடினார்கள். இருவரும் நிதானமாக ஆடி ரன் சேர்த்தனர். உஸ்மான் கவாஜா 155 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். மதிய உணவு இடைவேளை வரை இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை.

மதிய இடைவேளைக்கு பிறகு வீசப்பட்ட முதல் ஓவரில் கேப்டன் டிம் பெய்ன் (37 ரன், 116 பந்துகளில் 4 பவுண்டரியுடன்) விக்கெட்டை முகமது ஷமி வீழ்த்தினார். அவர் சிலிப்பில் நின்ற கேப்டன் விராட்கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அப்போது அணியின் ஸ்கோர் 192 ரன்னாக இருந்தது. டிம் பெய்ன், உஸ்மான் கவாஜா இணை 5-வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்தது.

அடுத்து, முந்தைய நாளில் முகமது ஷமி பந்து வீச்சில் கைவிரலில் ஏற்பட்ட காயத்தால் வெளியேறிய தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பிஞ்ச் (25 ரன்) களம் இறங்கினார். அவர் முதல் பந்திலேயே விக் கெட் கீப்பர் ரிஷாப் பான்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஒரே ஓவரில் முகமது ஷமி இந்த இரு விக்கெட்டுகளையும் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி அசத்தினார்.

நிலைத்து நின்று ஆடிய உஸ்மான் கவாஜா 213 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 72 ரன்கள் எடுத்த நிலையில் முகமது ஷமி பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்டிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த கம்மின்ஸ் 1 ரன்னிலும், நாதன் லயன் 5 ரன்னிலும், மிட்செல் ஸ்டார்க் 14 ரன்னிலும் அடுத்தடுத்து விரைவில் ஆட்டம் இழந்து பெவிலியன் திரும்பினார்கள்.

ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சில் 93.2 ஓவர்களில் 243 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. ஹேசில்வுட் 25 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 17 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி 6 விக்கெட்டும், ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டும், இஷாந்த் ஷர்மா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய லோகேஷ் ராகுல் முதல் ஓவரிலேயே ரன் எதுவும் எடுக்காமல் மிட்செல் ஸ்டார்க் பந்து வீச்சில் போல்டு ஆனார்.

அடுத்து களம் கண்ட புஜாரா (4 ரன்) ஹேசில்வுட் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் டிம் பெய்னிடன் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். முதல் இன்னிங்சில் சதம் அடித்த கேப்டன் விராட்கோலி இந்த முறை 40 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 17 ரன்கள் எடுத்த நிலையில் நாதன் லயன் பந்து வீச்சில் சிலிப்பில் நின்ற உஸ்மான் கவாஜாவிடம் கேட்ச் கொடுத்து ஏமாற்றம் அளித்தார். அப்போது அணியின் ஸ்கோர் 48 ரன்னாக இருந்தது.

இதனை அடுத்து சற்று நேரம் தாக்குப்பிடித்த தொடக்க ஆட்டக்காரர் எம்.விஜய் (20 ரன் 67 பந்துகளில் 3 பவுண்டரியுடன்) நாதன் லயன் சுழலில் போல்டு ஆனார். 5-வது விக்கெட்டுக்கு ஹனுமா விஹாரி, ரஹானேவுடன் ஜோடி சேர்ந்தார். அணியின் ஸ்கோர் 98 ரன்னாக உயர்ந்த போது ரஹானே (30 ரன், 47 பந்துகளில் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) ஹேசில்வுட் பந்து வீச்சில் டிராவிஸ் ஹெட்டினால் அருமையாக கேட்ச் செய்யப்பட்டு வெளியேறினார்.

இதைத்தொடர்ந்து விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட், ஹனுமா விஹாரியுடன் இணைந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடி மேலும் விக்கெட்டுகள் சரியாமல் பார்த்து கொண்டது. நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் இந்திய அணி 2-வது இன்னிங்சில் 41 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்தது. ஹனுமா விஹாரி 58 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 24 ரன்னும், ரிஷாப் பான்ட் 19 பந்துகளில் 9 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் உள்ளனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஹேசில்வுட் 2 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க் ஒரு விக்கெட்டும், சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

இன்று (செவ்வாய்க்கிழமை) 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. இந்திய அணி வெற்றிக்கு மேலும் 175 ரன்கள் தேவைப்படுகிறது. கைவசம் 5 விக்கெட்டுகள் உள்ளது. ஆஸ்திரேலிய மைதானங்களில் 200 ரன்களுக்கு மேலான இலக்கை எட்டிப்பிடிப்பது கடினமான விஷயமாகும். அதுவும் கடைசி நாளில் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடித்து ஆடுவது சிரமமானதாகும். எனவே இந்த போட்டியில் இந்திய அணியினர் தோல்வியை தவிர்க்க போராடினாலும் இந்திய அணி தோல்வியின் விளிம்பில் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ஆஸ்திரேலிய அணி இந்த போட்டியில் வெல்ல பிரகாசமான வாய்ப்பு உள்ளது.

‘ஒரு சுழற்பந்து வீச்சாளரை சேர்த்து இருக்கலாம்’-முகமது ஷமி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது இன்னிங்சில் 56 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளிய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி நேற்றைய ஆட்டம் முடிந்ததும் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

என்னை பொறுத்தமட்டில் இந்த டெஸ்ட் போட்டியில் நமது ஆடும் லெவன் அணியில் ஒரு முழு நேர சுழற்பந்து வீச்சாளரை சேர்த்து இருக்கலாம் என்று நினைக்கிறேன். இது குறித்து அணி நிர்வாகம் தான் முடிவு செய்ய முடியும். நீண்ட காலத்துக்கு பிறகு நமது அணியின் அனைத்து வேகப்பந்து வீச்சாளர்களும் வேகமாகவும், துல்லியமாகவும் பந்து வீசுகிறார்கள். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு நாங்கள் இந்த அளவுக்கு துல்லியமாக செயல்படவில்லை. நான் எப்பொழுதும் வேகமாகவும், துல்லியமாகவும் பந்து வீசவே முயற்சிக்கிறேன். டெஸ்ட் போட்டியை பொறுத்தமட்டில் நேர்த்தியாக பந்து வீசுவதில் கவனம் செலுத்த வேண்டும். நேர்த்தியாக பந்து வீசினால் தானாகவே விக்கெட் கிடைக்கும். முதல் 2 நாட்கள் பிட்ச் மிகவும் நன்றாக இருந்தது. 3-வது மற்றும் 4-வது நாளில் பிட்ச்சில் ஏற்றம், இறக்கம் இருந்தது. இரு அணி பேட்ஸ்மேன்களுக்கும் ஆடுகளம் சவாலாக இருந்தது.

விராட்கோலி, டிம் பெய்ன் இடையிலான வார்த்தை மோதல் குறித்து நான் அதிகம் பேச விரும்பவில்லை. இதுபோல் ஆட்டத்தில் நடக்க தான் செய்யும். இது குறித்து அதிகம் கவலைப்பட வேண்டியது இல்லை. டெஸ்ட் போட்டியில் இதுபோல் ஆக்ரோஷங்கள் அரங்கேற தான் செய்யும். இதுபோன்ற மோதல்கள் நடக்காமல் இருந்தால் போட்டியில் அதிக ஆர்வம் இருக்காது என்பது எனது எண்ணமாகும். இதுபோன்ற சம்பவங்கள் எங்களை பாதிக்காது. எங்களது ஆட்டத்தில் முன்னேற்றம் காண்பதில் மட்டுமே கவனம் செலுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்