‘இவ்வளவு தொகைக்கு விலை போவேன் என்று எதிர்பார்க்கவில்லை’– வருண்

ஐ.பி.எல். கிரிக்கெட் ஏலத்தில் ரூ.8.40 கோடிக்கு பஞ்சாப் அணியால் வாங்கப்பட்ட வருண் சக்ரவர்த்தி சென்னையைச் சேர்ந்தவர்.

Update: 2018-12-18 21:45 GMT

சென்னை, 

ஐ.பி.எல். கிரிக்கெட் ஏலத்தில் ரூ.8.40 கோடிக்கு பஞ்சாப் அணியால் வாங்கப்பட்ட வருண் சக்ரவர்த்தி சென்னையைச் சேர்ந்தவர். டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இந்த முறை கோப்பையை வென்ற மதுரை பாந்தர்ஸ் அணியில் இடம் பிடித்து விளையாடினார். 10 ஆட்டங்களில் விளையாடி 9 விக்கெட் எடுத்தார். ஓவருக்கு 4.7 மட்டுமே விட்டுக்கொடுத்தது இவரது சிக்கனத்தின் அடையாளமாகும். விஜய் ஹசாரா கோப்பை கிரிக்கெட்டில் தமிழக அணி தடுமாறினாலும் அதில் அதிக விக்கெட்டுகள் (22 விக்கெட்) வீழ்த்தியவராக திகழ்ந்தார்.

வலது கை சுழற்பந்து வீச்சாளரான 27 வயதான வருண் சக்ரவர்த்தி, கட்டிட கலை படிப்பு படித்தவர். தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சாளராக தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார். அதன் பிறகு கால்முட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக சுழற்பந்து வீச்சுக்கு மாறினார். வேலையை உதறிவிட்டு முழுநேர கிரிக்கெட் வீரராக மாறிய பிறகு மிகப்பெரிய முன்னேற்றம் கண்டார். கச்சிதமான சுழல் ஜாலம் மூலம் எதிரணி பேட்ஸ்மேன்களை மிரட்டுவதில் கில்லாடி. ஆப்பிரேக், லெக்பிரேக், கூக்ளி, கேரம் உள்பட 7 விதமாக பந்து வீசக்கூடியவர். அடிப்படை விலையான ரூ.20 லட்சத்தில் இருந்து 42 முறை உயர்த்தப்பட்டு பம்பர் பரிசை பெற்று இருக்கும் வருண் சக்ரவர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:–

இவ்வளவு பெரிய தொகைக்கு விலை போவேன் என்று ஒரு போதும் எதிர்பார்க்கவில்லை. மகிழ்ச்சியில் ஆகாயத்தில் மிதப்பது போல் உணர்கிறேன். அடிப்படை விலைக்கே விலை போவேன் என்று நினைத்தேன். மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகளே இல்லை. எனது வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு இது. கிங்ஸ் லெவன் அணியின் கேப்டன் அஸ்வின் உள்ளிட்ட வீரர்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள முடியும் என்று நம்புகிறேன். இதன் மூலம் சிறந்த கிரிக்கெட் வீரராக உருவெடுக்க முடியும். விஜய் ஹசாரே கிரிக்கெட்டில் சிறப்பாக பந்து வீசினேன். எனது செயல்பாட்டை ஐ.பி.எல். அணியின் நிர்வாகிகள் கவனித்து இருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஐ.பி.எல். போட்டியில் ஆடுவதை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன்.

இவ்வாறு வருண் சக்ரவர்த்தி கூறினார்.

மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘11–வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியையொட்டி சென்னையில் நடந்த வலை பயிற்சியில் வருண் சக்ரவர்த்தி பந்து வீசியதை பார்த்து இருக்கிறேன். இந்திய அணிக்காக விளையாடக்கூடிய திறமை அவரிடம் இருக்கிறது. தேர்வாளர்கள் அவரை கவனிக்க வேண்டும். இன்னொரு புதிரான ஒரு சுழற்பந்து வீச்சாளர் வருண்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்