தற்காலிக கேப்டனை தெரியுமா? - பெய்னுக்கு பதிலடி கொடுத்த பான்ட்

தற்காலிக கேப்டனை தெரியுமா என தன்னை சீண்டிய ஆஸ்திரேலிய வீரர் பெய்னுக்கு, ரிஷாப் பான்ட் பதிலடி கொடுத்தார்.

Update: 2018-12-29 23:15 GMT
மெல்போர்ன்,

இந்த டெஸ்டில் 3-வது நாள் ஆட்டத்தில் இந்திய வீரர் ரிஷாப் பான்ட் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது அவரை ஆஸ்திரேலிய கேப்டனும், விக்கெட் கீப்பருமான டிம் பெய்ன் ரொம்பவே சீண்டினார். ‘ஒரு நாள் போட்டிக்கு டோனி வந்து விட்டார். நாம் இவரை (ரிஷாப் பான்ட்) ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு எடுத்துக் கொள்ளலாம். அந்த அணிக்கு பேட்ஸ்மேன் தேவை. அதனால் ஆஸ்திரேலியாவில் இருப்பதை கொஞ்ச நாள் நீட்டித்துக் கொள். ஹோபர்ட் அழகான நகரம். தங்குவதற்கு ஒரு சொகுசு குடியிருப்பை அவருக்கு வழங்கி விடலாம்.... அப்புறம்... நான் என் மனைவியை சினிமாவுக்கு அழைத்து செல்லும் போது, நீ தான் என் குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டும் சரியா...’ என்று கூறி கேலி செய்தார்.

இதற்கு ரிஷாப் பான்ட் சுடச்சுட பதிலடி கொடுத்திருக்கிறார். நேற்று டிம் பெய்ன் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, அவருக்கு பின்னால் நின்ற ரிஷாப் பான்ட், ஜடேஜாவை நோக்கி ‘நமது சிறப்பு விருந்தினர் ஒருவர் வந்திருக்கிறார். எப்போதாவது தற்காலிக கேப்டனை (ஸ்டீவன் சுமித்துக்கு தடை விதிக்கப்பட்டதால் வேறு வழியின்றி கேப்டனாக்கப்பட்டவர்) பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? அவரை நீ அவுட் ஆக்க தேவையில்லை. ஏனெனில் அவருக்கு பேசுவது மிகவும் பிடிக்கும். எப்போதும் பேசிக்கொண்டு இருப்பார். பேச மட்டுமே அவருக்கு தெரியும்’ என்றார். பிறகு அருகில் நின்ற மயங்க் அகர்வாலிடம், ‘தற்காலிக கேப்டன் என்ற வார்த்தையை கேள்விபட்டு இருக்கிறாயா? எனக்கு தெரியும்’ என்று கூறி கிண்டலடித்தார். இந்த பேச்சுகள் எல்லாம் ஸ்டம்பில் பொருத்தப்பட்டுள்ள மைக்கில் பதிவாகியுள்ளது.

ரிஷாப் பான்டின் பேச்சை கேட்ட நடுவர் அவரை அழைத்து எச்சரித்தார்.

மேலும் செய்திகள்