பாகிஸ்தானுக்கு எதிரான 2–வது டெஸ்டில் வெற்றியின் விளிம்பில் தென்ஆப்பிரிக்கா

தென்ஆப்பிரிக்கா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் நடந்து வருகிறது.

Update: 2019-01-05 21:30 GMT

கேப்டவுன்,

தென்ஆப்பிரிக்கா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 177 ரன்னில் அடங்கியது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா 2–வது நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 382 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் 3–வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 431 ரன்கள் குவித்து ஆல்–அவுட் ஆனது.

அடுத்து 254 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2–வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் ஒரு கட்டத்தில் 3 விக்கெட் இழப்புக்கு 194 ரன்களுடன் ஓரளவு நல்ல நிலைமையில் இருந்தாலும், அதன் பிறகு விக்கெட்டுகளை மளமளவென பறிகொடுத்தது. அந்த அணி 70.4 ஓவர்களில் 294 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. அத்துடன் 3–வது நாள் ஆட்ட நேரம் முடிவுக்கு வந்தது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஆசாத் ‌ஷபிக் 88 ரன்களும், பாபர் அசாம் 72 ரன்களும் எடுத்தனர். தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்டெயின், ரபடா தலா 4 விக்கெட்டுகளை சாய்த்தனர். தென்ஆப்பிரிக்க அணி 4–வது நாளான இன்று 41 ரன்கள் இலக்குடன் 2–வது இன்னிங்சை விளையாடும். சிறிது நேரத்திலேயே இலக்கை எட்டிவிடும் என்பதில் சந்தேகமில்லை.

இதற்கிடையே, செஞ்சூரியன் (முதலாவது டெஸ்ட் நடந்த இடம்), கேப்டவுன் ஆடுகளங்கள் டெஸ்ட் போட்டிக்கு உகந்த வகையில் இல்லை என்று பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் (தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்) குற்றம் சாட்டி இருக்கிறார். கேப்டவுனில் இரண்டாவது நாளில் பந்து ஆடுகளத்தின் வெடிப்பில் பட்டு எகிறி வீரர்களின் உடலை பதம் பார்த்ததையும், இதனால் பல முறை ஆட்டம் நிறுத்தப்பட்டதையும் அவர் சுட்டிகாட்டியுள்ளார்.

மேலும் செய்திகள்