இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: சரிவை சமாளித்தது ஆஸ்திரேலியா ஹெட், லபுஸ்சானே அரைசதம் அடித்தனர்

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்டில் டிராவிஸ்ஹெட், லபுஸ்சானே ஆகியோரின் அரைசதங்களின் உதவியுடன் சரிவை சமாளித்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 323 ரன்கள் சேர்த்து ஆல்–அவுட் ஆனது.

Update: 2019-01-25 22:00 GMT

பிரிஸ்பேன், 

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்டில் டிராவிஸ்ஹெட், லபுஸ்சானே ஆகியோரின் அரைசதங்களின் உதவியுடன் சரிவை சமாளித்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 323 ரன்கள் சேர்த்து ஆல்–அவுட் ஆனது.

பகல்–இரவு டெஸ்ட்

ஆஸ்திரேலியா – இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பகல்–இரவு மோதலாக பிரிஸ்பேனில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இலங்கை அணி 144 ரன்னில் அடங்கியது.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா தொடக்க நாளில் 2 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்திருந்தது. மார்கஸ் ஹாரிஸ் (40 ரன்), நாதன் லயன் (0) களத்தில் இருந்தனர். இந்த நிலையில் 3–வது நாளான நேற்று ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து ஆடியது. மார்கஸ் ஹாரிஸ் 44 ரன்னிலும், லயன் 1 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினர். அப்போது ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுக்கு 82 ரன்களுடன் தடுமாறியது.

இந்த நெருக்கடியான சூழலில் மார்னஸ் லபுஸ்சானேவும், டிராவிஸ் ஹெட்டும் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து காப்பாற்றினர். நிலைத்து நின்று ஆடிய இவர்கள் 5–வது விக்கெட்டுக்கு 166 ரன்கள் திரட்டி வலுவூட்டினர். ஆஸ்திரேலியாவின் இந்த கோடை கால சீசனில் ஒரு விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட அதிகபட்ச பார்ட்னர்ஷிப் இது தான். லபுஸ்சானே 81 ரன்னிலும் (150 பந்து, 3 பவுண்டரி), டிராவிஸ் ஹெட் 84 ரன்னிலும் (187 பந்து, 10 பவுண்டரி) ஆட்டம் இழந்தனர். கடைசி கட்டத்தில் புதுமுக வீரர் குர்டிஸ் பேட்டர்சன் (30 ரன்), மிட்செல் ஸ்டார்க் (26 ரன்) ஆகியோரும் கணிசமான பங்களிப்பை அளித்து, அணியின் ஸ்கோரை 300 ரன்களை கடக்க வைத்தனர்.

ஆஸ்திரேலியா 323 ரன்

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 106.2 ஓவர்களில் 323 ரன்கள் எடுத்து ஆல்–அவுட் ஆனது. இலங்கை வேகப்பந்து வீச்சாளர் சுரங்கா லக்மல் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

பின்னர் 179 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2–வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 17 ரன்கள் எடுத்துள்ளது. இலங்கை அணி இன்னும் 162 ரன்கள் பின்தங்கி இருப்பதால் இந்த டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. 3–வது நாள் ஆட்டம் இன்று நடைபெறும்.

மேலும் செய்திகள்