ரஞ்சி கிரிக்கெட் இறுதிப்போட்டி: சவுராஷ்டிரா 307 ரன்னில் ‘ஆல்-அவுட்’ - ஸ்னெல் பட்டேல் சதம் அடித்தார்

ரஞ்சி கிரிக்கெட் இறுதிப்போட்டியில் சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 307 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. ஸ்னெல் பட்டேல் சதம் விளாசினார்.

Update: 2019-02-05 22:45 GMT
நாக்பூர்,

ரஞ்சி கிரிக்கெட்டில் நடப்பு சாம்பியன் விதர்பா-சவுராஷ்டிரா அணிகள் இடையிலான இறுதிப்போட்டி நாக்பூரில் நடந்து வருகிறது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த விதர்பா அணி முதல் இன்னிங்சில் 312 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. அதிகபட்சமாக அக்‌ஷய் கார்னிவார் 73 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார்.

பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய சவுராஷ்டிரா அணி 2-வது நாள் ஆட்டம் முடிவில் முதல் இன்னிங்சில் 59 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்து இருந்தது. தொடக்க ஆட்டக்காரர் ஸ்னெல் பட்டேல் 87 ரன்னுடனும், பிரேராக் மங்கட் 16 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 3-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து ஆடிய மங்கட் 21 ரன்னிலும், தனது 2-வது முதல்தர சதத்தை எட்டிய ஸ்னெல் பட்டேல் 209 பந்துகளில் 15 பவுண்டரியுடன் 102 ரன்கள் எடுத்த நிலையிலும் வெளியேறினர். கடைசி விக்கெட்டுக்கு ஒரு மணி நேரத்திற்கு மேலாக தாக்குப்பிடித்து ஆடிய கேப்டன் ஜெய்தேவ் உனட்கட் 46 ரன்கள் (101 பந்து) எடுத்து அணி 300 ரன்களை கடக்க உதவினார்.

சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 117 ஓவர்களில் 307 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. சகாரியா 28 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். விதர்பா அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதித்யா சர்வாதே 5 விக்கெட்டும், அக்‌ஷய் வாக்ஹரி 4 விக்கெட்டும் சாய்த்தனர்.

5 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய விதர்பா அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 31 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 55 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் பைஸ் பைசல் 10 ரன்னிலும், சஞ்சய் ரகுநாத் 16 ரன்னிலும் தர்மேந்திரசிங் ஜடேஜாவின் சுழலில் சிக்கினர்.

கணேஷ் சதீஷ் 24 ரன்னும், நட்சத்திர வீரர் வாசிம் ஜாபர் 5 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இன்று 4-வது நாள் ஆட்டம் நடக்கிறது.

மேலும் செய்திகள்