முதலாவது டெஸ்டில் இலங்கை அணிக்கு 304 ரன்கள் இலக்கு தென்ஆப்பிரிக்கா நிர்ணயித்தது

டர்பனில் நடந்து வரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கை அணிக்கு 304 ரன்களை வெற்றி இலக்காக தென்ஆப்பிரிக்கா நிர்ணயித்துள்ளது.

Update: 2019-02-15 22:30 GMT

டர்பன், 

டர்பனில் நடந்து வரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கை அணிக்கு 304 ரன்களை வெற்றி இலக்காக தென்ஆப்பிரிக்கா நிர்ணயித்துள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்

தென்ஆப்பிரிக்கா – இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டர்பனில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 235 ரன்னிலும், இலங்கை 191 ரன்னிலும் சுருண்டன. 44 ரன்கள் முன்னிலையுடன் 2–வது இன்னிங்சை விளையாடிய தென்ஆப்பிரிக்க அணி 2–வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் 25 ரன்களுடனும், விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் 15 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 3–வது நாளான நேற்று தென்ஆப்பிரிக்க அணி தொடர்ந்து ஆடியது. பிளிஸ்சிஸ், டி காக் இருவரும் அரைசதத்தை கடந்து அணிக்கு வலுவூட்டினர். ஸ்கோர் 191 ரன்களை எட்டிய போது, இந்த ஜோடியை அறிமுக சுழற்பந்து வீச்சாளர் லசித் எம்புல்டெனியா பிரித்தார். அவரது பந்து வீச்சில் டி காக் 55 ரன்களில் எல்.பி.டபிள்யூ. ஆனார். கேப்டன் பிளிஸ்சிஸ் 90 ரன்களில் (182 பந்து, 11 பவுண்டரி) ஆட்டம் இழந்தார். பின்வரிசை வீரர்கள் யாரும் சோபிக்கவில்லை.

304 ரன்கள் இலக்கு

தேனீர் இடைவேளைக்கு முன்பாக தென்ஆப்பிக்க அணி 79.1 ஓவர்களில் 259 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. அந்த அணி கடைசி 8 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை தாரைவார்த்தது குறிப்பிடத்தக்கது. புதுமுக சுழற்பந்து வீச்சாளர் எம்புல்டெனியா 5 விக்கெட்டுகளும், வேகப்பந்து வீச்சாளர் விஷ்வா பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதன் மூலம் இலங்கை அணிக்கு 304 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. கடின இலக்கை நோக்கி 2–வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 28 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 83 ரன்கள் எடுத்திருந்த போது, மழை மற்றும் போதிய வெளிச்சம் இன்மையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அத்துடன் 3–வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஒஷாடே பெர்னாண்டோ (28 ரன்), குசல் பெரேரா (12 ரன்) அவுட் ஆகாமல் உள்ளனர். இலங்கை அணியின் வெற்றிக்கு மேலும் 221 ரன்கள் தேவைப்படுகிறது. ஆனால் இலங்கையின் கைவசம் 7 விக்கெட்டுகள் மட்டுமே இருப்பதால், இந்த டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணியின் கையே சற்று ஓங்கி நிற்கிறது. இன்று 4–வது நாள் ஆட்டம் நடைபெறும்.

மேலும் செய்திகள்