சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணி 278 ரன்கள் குவித்து உலக சாதனை - ஹஸ்ரத்துல்லா 16 சிக்சர் விளாசி அமர்க்களம்

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணி 278 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தது. அதில் ஆப்கானிஸ்தான் வீரர் ஹஸ்ரத்துல்லா 16 சிக்சர் விளாசி அமர்க்களப்படுத்தினார்.

Update: 2019-02-23 23:00 GMT
டேராடூன்,

ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் பொதுவான இடமான இந்தியாவில் நடத்தப்படுகிறது. இதில் முதலாவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது சர்வதேச 20 ஓவர் போட்டி உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நேற்றிரவு நடந்தது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி ரன்மழை பொழிந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஹஸ்ரத்துல்லா ஜஜாய், உஸ்மான் கானி ஜோடியினர், அயர்லாந்தின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். இதனால் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் எகிறியது. ஹஸ்ரத்துல்லா 42 பந்துகளில் சதத்தை எட்டி அமர்க்களப்படுத்தினார். இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 236 ரன்கள் சேர்த்து மலைக்க வைத்தனர். ஒட்டுமொத்த 20 ஓவர் போட்டியில் இதுவரை யாரும் எட்டியிராத ஒரு பார்ட்னர்ஷிப் இதுவாகும். உஸ்மான் கானி 73 ரன்களில் (48 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) கேட்ச் ஆனார். மறுமுனையில் ஹஸ்ரத்துல்லாவின் ருத்ரதாண்டவம் கடைசி பந்து வரை ஓயவில்லை.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி 3 விக்கெட்டுக்கு 278 ரன்கள் குவித்தது. 20 ஓவர் போட்டியில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு 2016-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி 263 ரன்கள் எடுத்ததே சிறந்த ஸ்கோராக இருந்தது.

20 வயதான ஹஸ்ரத்துல்லா 162 ரன்களுடன் (62 பந்து, 11 பவுண்டரி, 16 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார். சர்வதேச 20 ஓவர் போட்டியில் தனிநபரின் 2-வது அதிகபட்சமாக இது பதிவானது. இந்த வகையில் ஆஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச் 172 ரன்கள் எடுத்ததே சாதனையாக நீடிக்கிறது. அதே நேரத்தில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் நொறுக்கிய வீரர் (16 சிக்சர்) என்ற சாதனைக்கும் ஹஸ்ரத்துல்லா சொந்தக்காரர் ஆனார்.

இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் தனதாக்கியது.

மேலும் செய்திகள்