‘வார்னரின் அதிரடிக்கு முன் என்னுடைய சதம் எடுபடாமல் போனது’ ராஜஸ்தான் வீரர் சாம்சன் சொல்கிறார்

வார்னரின் அதிரடிக்கு முன் தன்னுடைய சதம் எடுபடாமல் போனதாக ராஜஸ்தான் வீரர் சாம்சன் கூறினார்.

Update: 2019-03-30 21:30 GMT

ஐதராபாத், 

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு ஐதராபாத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தியது. இதில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 2 விக்கெட்டுக்கு 198 ரன்கள் குவித்தது. நடப்பு தொடரில் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்ற சஞ்சு சாம்சன் 102 ரன்களுடன் (55 பந்து, 10 பவுண்டரி, 5 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார். 199 ரன்கள் இலக்கை ஐதராபாத் அணி ஒரு ஓவர் மீதம் வைத்து எட்டிப்பிடித்து அசத்தியது. ஐ.பி.எல். வரலாற்றில் ஐதராபாத் அணியின் அதிகபட்ச ‘சேசிங்’ இதுவாகும். தொடக்க ஆட்டக்காரர்கள் டேவிட் வார்னர் 69 ரன்களும் (37 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்), ஜானி பேர்ஸ்டோ 45 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வித்திட்டனர்.

ஆட்டம் முடிந்ததும் சஞ்சு சாம்சன், வார்னருடன் ஜாலியாக கலந்துரையாடினார். அப்போது அவர் வார்னரிடம், ‘உண்மையை சொல்ல வேண்டும் எனக்குரியநாளை நீங்கள் (வார்னர்) சிதறடித்து விட்டீர்கள். நீங்கள் பேட்டிங் செய்த விதத்துக்கு முன்னால் எனது சதம் போதுமானதாக இல்லை. ‘பவர்–பிளே’யிலேயே ஆட்டம் எங்களது கையை விட்டு போய் விட்டது. இந்த மாதிரி ஆடினால், 250 ரன்கள் எடுத்தால் தான் வெற்றி பெற முடியும் போலும்’ என்றார். இந்த ஆடுகளம் தொடக்கத்தில் மெதுவாக இருந்தாலும் பிற்பாதியில் பேட்டிங்குக்கு எளிதாக இருந்ததாக இருவரும் குறிப்பிட்டனர்.

மேலும் செய்திகள்