‘டோனியின் இடத்தை நிரப்புவது கடினம்’ சென்னை அணியின் பயிற்சியாளர் பிளமிங் பேட்டி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டோனி இல்லாத போது அவரது இடத்தை நிரப்புவது கடினம் என்று அந்த அணியின் பயிற்சியாளர் பிளமிங் கூறினார்.

Update: 2019-04-27 23:15 GMT
சென்னை,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு சென்னை சேப்பாக்கத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சிடம் படுதோல்வி அடைந்தது. இதில் மும்பை அணி நிர்ணயித்த 156 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணி 17.4 ஓவர்களில் 109 ரன்னில் அடங்கியது. சேப்பாக்கத்தில் சென்னை அணியின் குறைந்த ஸ்கோர் இதுவாகும். மலிங்கா 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இந்த சீசனில் முதல்முறையாக அரைசதம் (67 ரன்) அடித்து ஆட்டநாயகன் விருது பெற்ற மும்பை கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், ‘எனது பார்ம் குறித்து நான் எந்த வகையிலும் கவலைப்பட்டதில்லை. ஏனெனில் நான் பந்தை நன்றாகவே அடித்து வந்தேன். எனக்குரிய நாள் வரும் என்பது தெரியும். அதன்படியே இன்றைய நாள் அமைந்தது. இந்த ஆட்டத்தில் டோனி விளையாடவில்லை (காய்ச்சல் காரணமாக ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது) என்பதை அறிந்ததும் அது எங்களுக்கு மிகப்பெரிய உத்வேகமும், உற்சாகமும் அளித்தது. அவர் இருந்தால் அந்த அணியை வெல்வது கடினம். அணிக்கு அதிக முயற்சி, பங்களிப்பு அளிக்கக்கூடியவர். டோனி இல்லாத போது அவர்களால் இலக்கை விரட்டிப்பிடிப்பது என்பது கடினமாகத்தான் போய் விடும். அவர் ஆடாததன் தாக்கத்தை வெளிப்படையாகவே பார்க்க முடிந்தது’ என்றார்.

சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் நிருபர்களிடம் கூறுகையில், ‘டோனி சிறந்த அணித்தலைவர். மிகச்சிறந்த வீரர். பல ஆண்டுகளாக சென்னை அணிக்காக நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரது இடத்தை நிரப்புவது மிகவும் கடினம். டோனி இல்லாத அணியில் சில ஓட்டைகள் விழத்தான் செய்கின்றன. அதை நாங்கள் சரி செய்ய முயற்சிக்காமல் இல்லை. ஆனால் அந்த ஓட்டை பெரிதாக உள்ளது என்பது தான் இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

இந்த சீசனில் அவர் ஆடாத இரு ஆட்டங்களிலும் மோசமாக தோற்று இருக்கிறோம். அவர் உடன் இருக்கும் போது வீரர்கள் சவுகரியமாக உணருகிறார்கள். மிகச்சிறந்த வீரர் ஒருவர் ஆட முடியாமல் போகும் போது வெற்றி பெற களத்தில் இமாலய முயற்சியை வெளிப்படுத்த வேண்டும்’ என்றார்.

சென்னை பொறுப்பு கேப்டன் சுரேஷ் ரெய்னா கூறுகையில், ‘எங்களது பேட்டிங் சரியில்லை. ஒவ்வொரு 2-3 ஓவருக்கு இடையே விக்கெட்டுகளை இழந்த வண்ணம் இருந்தோம். எங்களது பேட்ஸ்மேன்கள் கூடுதல் பொறுப்புடன் ஆட வேண்டியது அவசியமாகும். 156 ரன்கள் என்பது எட்டக்கூடிய இலக்கு தான். பவர்-பிளே மற்றும் மிடில் ஓவர்களில் அதிகமான விக்கெட்டுகளை இழந்து விட்டோம். எப்போதும் களம் இறங்கியதும் சில பந்துகளை கணித்து விட்டு, அதன் பிறகு எந்த பவுலரின் பந்து வீச்சை அடித்து ஆடுவது என்பதை முடிவு செய்ய வேண்டும். பேட்டிங்கில் எங்கு தவறு செய்கிறோம் என்பதை கண்டறிந்து அதை திருத்திக்கொள்வது குறித்து ஆலோசிப்போம்’ என்றார்.

மேலும் செய்திகள்