ஆஸ்திரேலிய வீரர் வெளியிட்ட படத்தால் சர்ச்சை

ஆஸ்திரேலிய வீரர் வெளியிட்ட படத்தால் சர்ச்சை எழுந்தது.

Update: 2019-04-30 22:45 GMT
சிட்னி,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ஜேம்ஸ் பவுல்க்னெர் நேற்று முன்தினம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்துடன் ஒரு தகவலை பதிவிட்டார். அதில், ‘புகைப்படத்தில் இருப்பவர் எனது வீட்டில் குடியிருக்கும் ராப் ஜப். அவரும் நானும் ஒரே வீட்டில் 5 ஆண்டுகள் வசிக்கிறோம். எனது மிகச்சிறந்த ஆண்தோழர் (பாய்பிரண்ட்) அவர். எனது பிறந்த நாளையொட்டி அவருக்கு விருந்தளித்தோம்’ என்று கூறியிருந்தார். பவுல்க்னெரின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அவர் தனது ஆண்தோழரை ஓரின சேர்க்கையாளர் என்று குறிப்பிட்டதாக நினைத்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்தன. வெளிப்படையாக நீங்கள் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்று கூறியதற்கு வாழ்த்துகள் என்று பலரும் கருத்து தெரிவித்தனர். இதே அர்த்தத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் வாழ்த்துகளை பதிவிட்டது.

இதனால் பதறிப்போன 29 வயதான பவுல்க்னெர் தான் ஓரின சேர்க்கையாளர் அல்ல என்று நேற்று விளக்கம் அளித்தார். ‘நான் வெளியிட்ட புகைப்படம் எனது சிறந்த நண்பர் ராப் ஜப். என்னுடைய வீட்டின் ஒரு பகுதியில் 5 ஆண்டுகளாக வசிக்கிறார். 5 ஆண்டுகள் ஒன்றாக வாழ்கிறோம் என்ற கருத்தை தவறான புரிந்து கொண்டு விட்டனர். நான் ஓரின சேர்க்கையாளர் அல்ல. அதே சமயம் ஓரின சேர்க்கை சமூகத்துக்கு மக்களிடம் ஆதரவு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று கூறியுள்ளார். பவுல்க்னெரின் அறிக்கையை பார்த்த பிறகு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் தனது கருத்துக்கு மன்னிப்பு கோரியுள்ளது.

மேலும் செய்திகள்