எழுச்சி பெற்ற இலங்கை (1996)

1996ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இலங்கை அணி சாம்பியன் பட்டம் வென்றது.

Update: 2019-05-20 23:15 GMT

6-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ஆசிய கண்டத்தை சேர்ந்த இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய 3 நாடுகள் (1996-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி முதல் மார்ச் 17-ந் தேதி வரை) இணைந்து நடத்தின. உலக கோப்பை போட்டியை 2-வது முறையாக நடத்தும் வாய்ப்பை இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் பெற்றன. இலங்கைக்கு முதல்முறையாக இந்த போட்டியை நடத்தும் வாய்ப்பு கிட்டியது.

முந்தைய உலக கோப்பை போட்டியில் பங்கேற்ற 9 அணிகளுடன், கென்யா, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை புதிய வரவாக கலந்து கொண்டன. உலக கோப்பை போட்டியில் 10-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டது இதுவே முதல்முறையாகும். போட்டியில் கலந்து கொண்ட 12 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டன. இலங்கை, ஆஸ்திரேலியா, இந்தியா, வெஸ்ட்இண்டீஸ், ஜிம்பாப்வே, கென்யா அணிகள் ‘ஏ’ பிரிவிலும், தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து அணிகள் ‘பி’ பிரிவிலும் இடம் பெற்றன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு (நாக்-அவுட்) தகுதி பெறும். லீக் முடிவில் இலங்கை, ஆஸ்திரேலியா, இந்தியா, வெஸ்ட்இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் கால்இறுதிக்குள் கால் பதித்தன. எதிர்பார்த்தப்படி சிறிய அணிகள் வெளியேறின. ஆஸ்திரேலியா, வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இலங்கையில் போதிய பாதுகாப்பு இல்லை என்று காரணம் காட்டி இலங்கை சென்று விளையாட மறுத்து விட்டது. இதனால் கொழும்பில் நடக்க இருந்த அந்த இரு ஆட்டங்களிலும் இலங்கை அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இலங்கை அணி சிரமமின்றி கால்இறுதி வாய்ப்பை உறுதி செய்தது.

முதல் 15 ஓவர்களில் பீல்டிங் கட்டுப்பாடு முறை கடந்த உலக கோப்பையில் அறிமுகம் ஆனாலும், அதனை இந்த உலக கோப்பை போட்டியில் இலங்கை அணி கனகச்சிதமாக பயன்படுத்தி ரன்கள் குவித்தது. இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாள ஜெயசூர்யா, கலுவிதரனா இணை கலக்கியது எனலாம். முதல் 15 ஓவர்களில் இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 117 ரன்னும், கென்யாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 123 ரன்னும் எடுத்து இலங்கை அணியினர் வியக்க வைத்தனர்.

கால்இறுதி ஆட்டங்களில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தையும், இந்திய அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும், வெஸ்ட்இண்டீஸ் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவையும், ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தையும் தோற்கடித்து அரை இறுதிக்குள் நுழைந்தன. அரைஇறுதியில் இந்திய அணி இலங்கையிடம் வீழ்ந்தது. மற்றொரு அரை இறுதியில் ஆஸ்திரேலிய அணி 5 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீசை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

பாகிஸ்தானில் உள்ள லாகூரில் நடந்த இறுதி யுத்தத்தில் அர்ஜூனா ரணதுங்கா தலைமையிலான இலங்கையும், மார்க் டெய்லர் தலைமையிலான ஆஸ்திரேலியாவும் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய இலங்கை அணி 46.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்முறையாக உலக கோப்பையை உச்சி முகர்ந்தது. அத்துடன் போட்டியை நடத்திய நாடு கோப்பையை வென்றதில்லை என்ற முந்தைய சரித்திரத்தையும் மாற்றியது. 107 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்த இலங்கை வீரர் அரவிந்த் டிசில்வா ஆட்ட நாயகன் விருது பெற்றார். இலங்கை வீரர் ஜெயசூர்யா தொடர்நாயகன் விருது பெற்றார். இந்த தொடரில் இந்திய வீரர் சச்சின் தெண்டுல்கர் 523 ரன்களுடன் அதிக ரன் குவித்தவர் பட்டியலில் முதலிடத்தையும், இந்திய சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்பிளே 15 விக்கெட்டுடன் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர் பட்டியலில் முதலிடத்தையும் பிடித்தனர்.

இந்த போட்டியின் லீக் ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான வெஸ்ட்இண்டீஸ் அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் கென்யாவிடம் தோல்வி கண்டு அதிர்ச்சி அளித்தது. கடந்த 5 உலக கோப்பை போட்டிகளில் மொத்தம் வெறும் 4 வெற்றிகளை மட்டுமே பெற்று இருந்த இலங்கை அணி இந்த போட்டியில் பெரும் எழுச்சி பெற்று அசத்தியதுடன், ஒரு தோல்வியை கூட சந்திக்கவில்லை. கென்யாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்புக்கு 398 ரன்கள் குவித்தது. இது ஒரு நாள் போட்டியில் ஒரு அணியின் அதிகபட்ச ரன்னாக 2006-ம் ஆண்டு வரை நீடித்தது.

சாதனை படைத்த கேரி கிர்ஸ்டன்

ஐ க்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி வீரர் கேரி கிர்ஸ்டன் 159 பந்துகளில் 13 பவுண்டரி, 4 சிக்சருடன் 188 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இது உலக கோப்பை போட்டியில் தனிநபரின் அதிகபட்ச ரன்னாக நீண்ட நாட்கள் நீடித்தது. 2015-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் இந்த சாதனையை கிறிஸ் கெய்ல் (வெஸ்ட்இண்டீஸ்), மார்ட்டின் கப்தில் (நியூசிலாந்து) ஆகியோர் தகர்த்தனர்.

கலவரத்தால் பாதியில் முடிந்த அரைஇறுதி ஆட்டம்

இ ந்த உலக கோப்பை போட்டியில் முகமது அசாருதீன் தலைமையிலான இந்திய அணி லீக் ஆட்டங்களில் ஆஸ்திரேலியா, இலங்கையிடம் தோல்வி கண்டது. வெஸ்ட்இண்டீஸ், ஜிம்பாப்வே, கென்யா அணிகளை தோற்கடித்து கால்இறுதிக்குள் நுழைந்தது. கால்இறுதியில் 39 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை சாய்த்தது. அடுத்து இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான அரைஇறுதி ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் சுமார் 1 லட்சம் ரசிகர்கள் முன்னிலையில் அரங்கேறியது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய இந்திய அணியில் தெண்டுல்கர் (65 ரன்கள்) தவிர மற்றவர்கள் வந்த வேகத்தில் ஆட்டம் இழந்து வெளியேறினார்கள். தோல்வியின் பாதையில் பயணித்த இந்திய அணி 34.1 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்து இருந்த போது ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர். கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் மைதானத்துக்குள் தூக்கி எறிந்தனர். கேலரியில் தீயும் வைத்தனர். கலவரத்தை கட்டுப்படுத்த எடுத்த முயற்சிக்கு உடனடியாக பலன் கிடைக்கவில்லை. போட்டி தொடர வாய்ப்பு இல்லாததால் இலங்கை அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்