ஏழைக்குடும்பத்தில் பிறந்து சாதித்த ஷாகிப் அல் ஹசன்

ஏழைக்குடும்பத்தில் பிறந்து சாதித்த வங்காளதேச வீரர் ஷாகிப் அல் ஹசன்.

Update: 2019-06-18 10:18 GMT
வங்கதேச ஆல் ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் கொல்கத்தா அருகே இருக்கும் வங்கதேசத்தின் சிறிய கிராமமான மவுரா என்ற இடத்தில் பிறந்தார். அவர் பிறந்த நேரத்தில் குடும்பம் வறுமையில் தான் இருந்தது. தினப்படி சாப்பாட்டிற்கே அவரின் குடும்பம் கஷ்டப்பட்டு வந்தது. கொல்கத்தாவில் குடும்பத்தினர் அவ்வப்போது வந்து வேலை பார்த்து கடன்களை அடைத்து வந்தனர்.

ஆனால் ஹசனுக்கு இந்த வறுமை எல்லாம் பெரிய விஷயமாக இருக்கவில்லை. ஆம், ஹசன் வறுமைக்கும் இடையில் கிரிக்கெட் மீது காதல் கொண்டார். 12 வயது இருக்கும் போதே ஊர் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடியவர், பள்ளி கிரிக்கெட் அணியிலும் பின்னர் சேர்ந்தார். பள்ளியில் அதிரடியாக வேகப்பந்து வீசி வந்த அவர் கொஞ்சம் கொஞ்சமாக பேட்டிங்கிலும் மெருகேறினார்.

பள்ளி அணியில் விளையாடும் போது இவர் போட்ட ஓவர் ஒன்று அங்கு வந்திருந்த வங்கதேச கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுக்கு பிடித்து போனது. இதனால் அவர் அந்நாட்டின் மிக பிரபலமான இஸ்லாபுர் பாரா கிளப் அணியில் இணைய வாய்ப்பு கிட்டியது. இந்த வாய்ப்புதான் அவரின் வாழ்க்கையை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றியது. இங்குதான் அவர் தனது பவுலிங் வித்தையை கற்றுக்கொண்டார். அதேபோல் பேட்டிங் செய்யவும் சரியாக கற்றுக்கொண்டார்.

அவரின் குடும்பமும் கொஞ்சம் கொஞ்சமாக வறுமையில் இருந்து மீண்டு வர தொடங்கியது. 17 வயதில் இவர் கிளப் அணியில் ஆடியதை பார்த்த வங்கதேச அணி நிர்வாகிகள், நேரடியாக இவரை தேசிய அணியில் சேர்ப்பதற்கான பயிற்சியில் களமிறக்கினார்கள். 2004ல் பயிற்சியை தொடங்கிய இவர் 2006ல் வங்கதேசம் அணியின் அண்டர் 19 அணியில் சேர்ந்தார்.

அந்த தொடரில் அவர் 85 பந்தில் செஞ்சுரி அடித்து அசத்தினார். அவரின் திறமையை பார்த்த நிர்வாகிகள் 2006ல் தேசிய அணியில் நிரந்தரமாக எடுத்தனர். முதலில் பேட்டிங் மட்டும் செய்து வந்த அவர் முழு ஆல்ரவுண்டராக மாறினார். இதை பார்த்த மற்ற நாட்டு அணிகள் கவுண்டி கிரிக்கெட், ஐபிஎல், பிபிஎல் உள்ளிட்ட பெரிய தொடர்களில் இவரை எடுத்தது.

இதுவரை 201 ஒருநாள், 55 டெஸ்ட், 73 இருபது ஓவர் போட்டிகளில் இவர் விளையாடி இருக்கிறார். 2006-2008தான் இவரின் கிரிக்கெட் வாழ்க்கையில் மிக முக்கியமான வருடங்கள். அதன்பின் அவர் தற்போது தனது வாழ்நாள் பார்மில் இருக்கிறார். இவர் உலகின் நம்பர் ஒன் ஆல் ரவுண்டராக இருக்கிறார். கடந்த 10 வருடமாக நம்பர் 1 ஆல் ரவுண்டர் என்ற சிம்மாசனத்தில் மாறி மாறி இவர் அமர்ந்து வருகிறார்.

நேற்று மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியிலும் இவர் அதிரடியாக ஆடினார்.நேற்று நடந்த போட்டியில் ஹசன் வெறும் 99 பந்துகளில் 124 ரன்கள் எடுத்தார். இதுதான் அந்த அணியின் வெற்றிக்கு பெரிய காரணமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஷாகிப் அல் ஹசன் தான் இந்த உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்களை எடுத்த வீரர். ஒரு நாள் போட்டிகளில்  6000 ரன்கள், மற்றும் 200 விக்கெட்களை துரிதமாக வீழ்த்திய ஆல்ரவுண்டர் என்ற புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளார்.

இவரின் ஆட்டத்தை பார்த்து உலக நாடுகள் எல்லாம் வியந்து போய் இருக்கிறது. எனக்கு கிரிக்கெட்தான் வாழ்க்கை கொடுத்தது. எதுவும் இல்லாமல் இருந்தேன். இப்போது எல்லாம் மாறிவிட்டது. என் மீது அளவுகடந்த அன்பு செலுத்தும் வங்கதேச ரசிகர்களுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன் என்று இந்த உலகக் கோப்பை ஹீரோ தெரிவித்து இருக்கிறார்.

மேலும் செய்திகள்