8 அணிகள் பங்கேற்கும் டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜூலை 19–ந் தேதி தொடக்கம்

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாக கமிட்டி கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது.

Update: 2019-06-18 21:30 GMT

சென்னை, 

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாக கமிட்டி கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் போட்டியில் பங்கேற்கும் 8 அணி நிர்வாகத்தினருடன் கலந்து பேசி 4–வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி 4–வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (ஜூலை) 19–ந் தேதி முதல் ஆகஸ்டு 18–ந் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 32 ஆட்டங்கள் சென்னை, நெல்லை, நத்தம் ஆகிய இடங்களில் அரங்கேறுகிறது. போட்டி அட்டவணை விரைவில் வெளியிடப்படும். அணிகள் வீரர்களை பரிமாற்றம் செய்து கொள்ளும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு அணியும் 3 வீரர்களை விடுவித்து 3 வீரர்களை வாங்கி கொள்ள முடியும். அணியில் 19 வயதுக்கு உட்பட்ட வீரர்கள் கட்டாயம் இடம் பெற வேண்டும் என்ற விதிமுறை நீக்கப்பட்டுள்ளது. ஒரு அணியில் குறைந்தபட்சமாக 16 வீரர்களும், அதிகபட்சமாக 22 வீரர்களும் இடம் பெறலாம். இதில் 2 பேர் மாவட்ட வீரர்களாக இருக்க வேண்டும். வீரர்கள் பரிமாற்றம் இன்று (19–ந் தேதி) முதல் வருகிற 29–ந் தேதி வரை நடைபெறும். புதிய வீரர்கள் பதிவு நாளை (வியாழக்கிழமை) முதல் வருகிற 29–ந் தேதி வரை நடைபெறும். புதிய வீரர்கள் பதிவுக்கான விண்ணப்பத்தை தமிழ்நாடு கிரிக்கெட் சங்க இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வீரர்கள் ஒதுக்கீடு அடுத்த மாதம் (ஜூலை) 4–ந் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க இணை செயலாளர் ஆர்.ஐ.பழனி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்