வயது வெறும் எண் மட்டுமே; வைரலாகும் 87 வயது கிரிக்கெட் ரசிகை

வயது வெறும் எண் மட்டுமே, ஆர்வம் தான் எந்த எல்லையையும் தாண்டிச் செல்ல வைக்கும் கிரிக்கெட் ரசிகை 87 வயது சாருலதா பாட்டி.

Update: 2019-07-03 05:15 GMT
பர்மிங்காம்,

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், நேற்று முன்தினம் பர்மிங்காமில் நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி வங்காளதேசத்தை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 6-வது வெற்றியோடு அரைஇறுதிக்கு முன்னேறியது. இந்த ஆட்டத்தை உற்சாகமாக கண்டுகளித்த ஆயிரக்கணக்கான ரசிகர்களில் கேமராக்களின் பார்வை அதிகம் மொய்த்தது, வீல்சேரில் வந்திருந்த சாருலதா படேல் என்ற 87 வயதான மூதாட்டியை நோக்கித் தான்.

மூச்சு விட தடுமாறும் வயதில் ‘தம்’ கட்டி ஊதுகுழலை ஊதியபடி, முகத்தில் மூவர்ண நிறத்தை தீட்டி கையில் தேசிய கொடியுடன் நமது வீரர்கள் ரன் அடித்த போதும், விக்கெட் வீழ்த்திய போதும் அவர் கொண்டாடிய விதம் சக ரசிகர்களை மட்டுமின்றி வீரர்களின் கவனத்தையும் ஈர்த்தது. அத்துடன் சமூக வலைதளங்களிலும் அவரது புகைப்படங்கள் அதிகமாக பகிரப்பட்டன.

எல்லாவற்றுக்கும் மேலாக ஆட்டம் முடிந்ததும் இந்திய கேப்டன் விராட் கோலியும், துணை கேப்டன் ரோகித் சர்மாவும் அந்த மூதாட்டியை சந்தித்து ஆசி பெற்றனர். மூதாட்டி, அவர்களுக்கு முத்தமிட்டு வாழ்த்து தெரிவித்தார். சாருலதா படேலின் பூர்விகம் இந்தியா என்றாலும் தற்போது லண்டனில் வசிக்கிறார். இந்தியாவின் எஞ்சிய ஆட்டங்களையும் இதே போல் நேரில் வந்து பார்க்க வேண்டும் என்று கோலி கோரிக்கை விடுத்த போது, தன்னிடம் டிக்கெட் இல்லை என்று கூறினார். அதற்கு கோலி அது பற்றி கவலைப்பட வேண்டாம், நான் ஏற்பாடு செய்து தருகிறேன் என்று உறுதி அளித்தார்.

இது குறித்து கோலி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இந்த ஆட்டத்தை நேரில் கண்டுகளித்து ஆதரவளித்த ரசிகர்களுக்கு குறிப்பாக சாருலதா படேலுக்கு நன்றி. அவருக்கு வயது 87. நான் பார்த்தமட்டில், அதீத ஆர்வமும், அர்ப்பணிப்பும் உள்ள ரசிகர்களில் அவரும் ஒருவர். வயது என்பது வெறும் நம்பர் மட்டுமே. ஆர்வம் தான் உங்களை எந்த எல்லையையும் தாண்டிச் செல்ல வைக்கும். அவரது ஆசியோடு அடுத்த ஆட்டத்திற்கு செல்கிறோம்’ என்று குறிப்பிட்டார்.

சாருலதா கூறுகையில், ‘பல ஆண்டுகளாக நான் கிரிக்கெட் போட்டியை பார்த்து வருகிறேன். 1983-ம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் இந்திய அணி உலக கோப்பையை வென்ற போது நானும் இங்கு தான் (இங்கிலாந்து) இருந்தேன். அதே போல் இந்த தடவையும் இந்திய அணி நிச்சயம் மகுடம் சூடும். அதற்காக நான் கடவுளை பிரார்த்திக்கிறேன். எனது ஆசீர்வாதம் இந்திய அணிக்கு எப்போதும் உண்டு. கோலி, ரோகித் போன்ற கிரிக்கெட் வீரர்களை நான் சந்தித்து பேசுவேன் என்று ஒரு போதும் நினைத்ததில்லை. இது கனவு மாதிரி உள்ளது ’ என்றார்.


மேலும் செய்திகள்