பிரிவு உபசார போட்டிக்கு சோயிப் மாலிக் தகுதியானவர் அல்ல - வாசிம் அக்ரம் சொல்கிறார்

பிரிவு உபசார போட்டிக்கு சோயிப் மாலிக் தகுதியானவர் அல்ல என்று வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

Update: 2019-07-05 23:28 GMT
லண்டன்,

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் இடம் பெற்று இருந்த முன்னாள் கேப்டனான 37 வயது சோயிப் மாலிக் இந்த உலக கோப்பை போட்டியுடன் கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தார். நடப்பு உலக கோப்பை தொடரில் 3 ஆட்டங்களில் ஆடிய மாலிக் 8 ரன்கள் மட்டுமே எடுத்து சொதப்பினார். அதன் பிறகு அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. நேற்று நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்திலும் சோயிப் மாலிக் ஓரங்கட்டப்பட்டார்.

பிரிவு உபசார போட்டியில் விளையாட வாய்ப்பு வழங்க சோயிப் மாலிக் தகுதியானவரா? என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரமிடம் கேட்ட போது, ‘சோயிப் மாலிக் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு நிறைய பங்களிப்பை அளித்து இருக்கிறார். இதனால் அவர் உயரிய நிலையுடன் விடைபெற தகுதியானவர் தான். ஆனால் இந்த உலக கோப்பை போட்டியில் சோயிப் மாலிக் பல ஆட்டங்களில் விளையாடவில்லை. 2 முறை டக்-அவுட் ஆனார். இது ஒன்றும் கிளப் கிரிக்கெட் போட்டி அல்ல. தற்போது அவர் ஆடும் நிலையை பார்க்கையில் பிரிவு உபசார போட்டிக்கு மாலிக் தகுதியானவர் அல்ல. அவருக்கு வழியனுப்பு விழா விருந்து நடத்த ஏற்பாடு செய்யலாம்’ என்றார்.

மேலும் செய்திகள்