‘45 நிமிட மோசமான ஆட்டம் எங்களது கதையை முடித்து விட்டது’– கோலி

12–வது உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் லீக் சுற்றில் 15 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்த இந்திய அணி அரைஇறுதியில் நியூசிலாந்துடன் பரிதாபமாக தோற்று மூட்டையை கட்டியது.

Update: 2019-07-10 22:30 GMT

மான்செஸ்டர், 

12–வது உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் லீக் சுற்றில் 15 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்த இந்திய அணி அரைஇறுதியில் நியூசிலாந்துடன் பரிதாபமாக தோற்று மூட்டையை கட்டியது. தோல்விக்கு பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது:–

இந்த உலக கோப்பையில் நாங்கள் சிறப்பாக விளையாடி வந்த நிலையில், இந்த ஆட்டத்தில் 45 நிமிடங்கள் மோசமாக ஆடி, அதன் மூலம் போட்டியில் இருந்தே வெளியேற்றப்பட்டோம் என்பது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. இதை ஏற்றுக்கொள்ளவே கடினமாக இருக்கிறது. எல்லா பெருமையும் நியூசிலாந்து பவுலர்களையே சாரும். ஸ்விங் செய்வதிலும், பந்தை சரியான இடத்தில் பிட்ச் செய்து வீசுவதிலும் அசத்தினர். முதல் அரைமணி நேரம் அவர்கள் பந்து வீசிய விதம் தான் ஆட்டத்தில் வித்தியாசத்தை ஏற்படுத்தி விட்டது. ரவீந்திர ஜடேடேஜாவின் பேட்டிங் அருமையாக இருந்தது. அவருக்கு டோனி சிறப்பான ஒத்துழைப்பை வழங்கினார்.

முந்தைய நாள் எங்களுக்கு பந்து வீச்சில் சிறப்பான ஒன்றாக அமைந்ததை அறிவோம். அவர்களை எட்டக்கூடிய இலக்கில் கட்டுப்படுத்தியதாகவே நினைத்தோம். ஆனால் முக்கியமான தருணத்தில் எங்களை விட கச்சிதமாக, சாதுர்யமாகவும் செயல்பட்டனர். இந்த வெற்றிக்கு நியூசிலாந்து தகுதியான அணி. பேட்டிங்கில் எங்களது ஷாட் தேர்வு இன்னும் நன்றாக இருந்திருக்கலாம். மற்றபடி இந்த தொடரில் நாங்கள் நன்றாகவே ஆடினோம். அதை நினைத்து பெருமைப்படுகிறேன்.

இவ்வாறு கோலி கூறினார்.

நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கூறுகையில், ‘இந்த ஆடுகளத்தில் 240 முதல் 250 ரன்கள் வரை சவாலான ஸ்கோராக இருக்கும், அதை வைத்து இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்க முடியும் என்று நினைத்தோம். அதன்படியே செய்து காட்டியிருக்கிறோம். டோனியின் ரன்–அவுட் திருப்பு முனையாக அமைந்தது. எங்களது வீரர்கள் ஒவ்வொருவரும் தங்களது சிறப்பான பங்களிப்பை அளித்து வெற்றிக்கு உதவினர். 2 நாள் நடந்த அரைஇறுதியில் முடிவு திருப்திகரமாக அமைந்திருக்கிறது’ என்றார்.

டோனி ஓய்வு குறித்து கோலி பதில்

இந்த உலக கோப்பை போட்டியுடன் இந்திய மூத்த வீரர் 38 வயதான டோனி ஓய்வு பெறலாம் என்று கூறப்பட்ட நிலையில் அது குறித்து இந்திய கேப்டன் விராட் கோலியிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, தனது வருங்கால திட்டம் (ஓய்வு) குறித்து இப்போது வரைக்கும் டோனி என்னிடம் எதுவும் பேசவில்லை என்று பதில் அளித்தார். மேலும் கோலி கூறுகையில், ‘இந்த ஆட்டத்தில் டோனி ஒரு பக்கம் நிலைத்து நின்று, இன்னொரு பக்கம் ஜடேஜாவை இயல்பாக ஆட அனுமதித்தார். டோனி சூழ்நிலைக்கு தக்கபடி விளையாடினார்’ என்றும் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்