நான் தகுதியானவன் இல்லை: நியூசிலாந்தின் உயரிய விருதுக்கு பொருத்தமானவர் வில்லியம்சன் தான் - பென் ஸ்டோக்ஸ் கருத்து

நியூசிலாந்தின் உயரிய விருதுக்கு பொருத்தமானவர் கேப்டன் வில்லியம்சன் தான். அந்த விருதுக்கு நான் தகுதி படைத்தவன் இல்லை என்று இங்கிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2019-07-24 00:11 GMT
லண்டன்,

இங்கிலாந்தில் நடந்த 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் இறுதிப்போட்டியில் மோதிய இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் தலா 241 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் டையில் முடிந்தது. வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க நடத்தப்பட்ட சூப்பர் ஓவரிலும் இரு அணிகளும் தலா 15 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் மீண்டும் டை ஆனது. இதனால் அதிக பவுண்டரிகள் அடித்ததன் அடிப்படையில் இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை வென்றதாக அறிவிக்கப்பட்டது. பவுண்டரி அடிப்படையில் வெற்றியை முடிவு செய்தது சர்ச்சையை கிளப்பியதுடன், இறுதிப்போட்டியில் நடுவரின் சில முடிவுகளும் விமர்சனத்துக்கு உள்ளானது.

உலக கோப்பை தொடரில் பென் ஸ்டோக்ஸ் 465 ரன்கள் எடுத்ததுடன் 7 விக்கெட்டும் வீழ்த்தி இங்கிலாந்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். அவர் இறுதிப்போட்டியில் 84 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். அத்துடன் சூப்பர் ஓவரில் 8 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் (578 ரன்கள்) தொடர்நாயகன் விருதை கைப்பற்றினார். நியூசிலாந்தில் பிறந்தவரான பென் ஸ்டோக்ஸ் சிறுவயதில் இங்கிலாந்தில் குடியேறி அந்த நாட்டு அணியில் இடம் பிடித்து விளையாடி வருகிறார்.

உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணிக்காக விளையாடினாலும் பென் ஸ்டோக்ஸ் நியூசிலாந்து நாட்டை சேர்ந்தவர் என்பதால் நியூசிலாந்து அரசு சார்பில் வழங்கப்படும் இந்த ஆண்டுக்கான உயரிய விருதுக்கு பென் ஸ்டோக்ஸ் பெயரும் பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் நியூசிலாந்து அரசின் கவுரவமிக்க விருதுக்கு (ஆண்டின் சிறந்த நியூசிலாந்துக்காரர்) தகுதியானவர் தான் இல்லை என்றும் அந்த விருதுக்கு நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தான் பொருத்தமானவர் என்றும் தெரிவித்துள்ள பென் ஸ்டோக்ஸ் விருதை ஏற்க பணிவுடன் மறுத்து இருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்த ஆண்டுக்கான நியூசிலாந்து அரசின் உயரிய விருதுக்கு எனது பெயர் பரிந்துரை செய்யப்பட்டு இருப்பது பெருமை அளிக்கிறது. என்னுடைய நியூசிலாந்தையும், பாரம்பரியமிக்க மவுரி இனத்தையும் நினைத்து பெருமிதம் கொள்கிறேன். ஆனால் கவுரவமிக்க இந்த விருதை பெறுவதற்கு உகந்தவன் நான் இல்லை. நியூசிலாந்து நாட்டுக்காக அதிக பெருமை சேர்த்தவர்கள் தான் இந்த அங்கீகாரத்தை பெறுவதற்கு தகுதி படைத்தவர்கள்.

இங்கிலாந்து உலக கோப்பையை வெல்ல நான் உதவி இருக்கிறேன். 12 வயதில் இருந்து நான் இங்கிலாந்து நாட்டுக்காக எனது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன். நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு தான் அந்த நாட்டு மக்கள் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். வில்லியம்சன் நியூசிலாந்து கிரிக்கெட்டில் ஒரு ஜாம்பவான். அவர் தான் நியூசிலாந்து மக்களின் போற்றுதலுக்குரியவராக இருக்க வேண்டும். உலக கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணியை சிறப்பாக வழிநடத்தி உயர்வான இடத்துக்கு கொண்டு வந்தார். வில்லியம்சன் தொடர்நாயகனான தேர்வு செய்யப்பட்டார். அவர் இளம் வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கக்கூடியவர். ஆடுகளத்தில் ஒவ்வொரு சூழ்நிலையிலும் மற்றவர்களின் உணர்வுகளை அறிந்து செயல்படுதல், அமைதியாக அணியை வழிநடத்துதல் என எல்லாவற்றிலும் வில்லியம்சன் சிறந்தவராக விளங்கினார். நியூசிலாந்தின் உயரிய விருதை பெறுவதற்கு அவர் தகுதியானவர். என்னுடைய ஓட்டும் வில்லியம்சனுக்கு தான். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்