ஸ்கோடா நிறுவனம் சார்பில் இளம் வீரர்கள் தேர்வுக்கான கிரிக்கெட் போட்டிகள் சென்னையில் நடக்கிறது

ஸ்கோடா நிறுவனம் சார்பில் இளம் வீரர்கள் தேர்வுக்கான கிரிக்கெட் போட்டிகள் சென்னையில் 17, 18-ந் தேதிகளில் நடக்க உள்ளது.

Update: 2019-08-12 22:59 GMT
சென்னை,

ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் சார்பில் நகரங்களில் அறியப்படாமல் இருக்கும் இளம் கிரிக்கெட் விளையாட்டு வீரர்களை அடையாளம் காணும் வகையில் ‘ஸ்கோடா சிங்கிள் விக்கெட் 2019-20’ என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதன்படி, நெல்லை, மதுரை, திருச்சி, சென்னை மற்றும் கோவை ஆகிய நகரங்களில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. வருகிற 17 மற்றும் 18-ந் தேதிகளில் சென்னையிலும், 25-ந் தேதி கோவையிலும் நகர அளவிலான போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகள் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் 14 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆகிய இரு பிரிவுகளில் நடைபெறுகிறது.

நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட நகரங்களில் நடைபெறும் போட்டிகளில் திறமையாக விளையாடுபவர்கள் தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். மும்பையில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு ‘ஸ்கோடா சிங்கிள் விக்கெட் தேசிய சாம்பியன்’ என்ற விருதும், ரூ.10 லட்சம் ரொக்கப்பரிசும், 2-ம் இடம் பெற்றவர்களுக்கு ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசும் வழங்கப்படும். இறுதி போட்டியில் வெற்றி பெறுபவர்கள் இந்திய அணிக்கு தேர்வாகும் வாய்ப்பு இருக்கிறது.

மேற்கண்ட தகவல் ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்