20 ஓவர் கிரிக்கெட்டில் சதத்துடன் 8 விக்கெட்டுகள் வீழ்த்தி கிருஷ்ணப்பா கவுதம் அசத்தல்

டி.என்.பி.எல். கிரிக்கெட் பாணியில் கர்நாடகாவில் கே.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.

Update: 2019-08-24 22:00 GMT
பெங்களூரு, 

டி.என்.பி.எல். கிரிக்கெட் பாணியில் கர்நாடகாவில் கே.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் பெங்களூருவில் நடந்த ஷிமோகா லயன்சுக்கு எதிரான ஆட்டத்தில் பெல்லாரி டஸ்கர்ஸ் அணிக்காக களம் இறங்கிய கிருஷ்ணப்பா கவுதம் 56 பந்துகளில் 7 பவுண்டரி, 13 சிக்சருடன் 134 ரன்கள் விளாசினார். கே.பி.எல். போட்டிகளில் ஒரு வீரரின் அதிகபட்சம் இதுவாகும். மழை காரணமாக 17 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் பெல்லாரி அணி 3 விக்கெட்டுக்கு 203 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய ஷிமோகா அணி 16.3 ஓவர்களில் 133 ரன்களில் அடங்கி தோல்வி அடைந்தது. செஞ்சுரி அடித்து முத்திரை பதித்த கிருஷ்ணப்பா கவுதம் தனது மாயாஜால சுழற்பந்து வீச்சின் மூலம் 4 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை அள்ளினார். மாநில 20 ஓவர் லீக் போட்டிகளுக்கு 20 ஓவர் போட்டிகளுக்குரிய அந்தஸ்து கிடையாது. இல்லாவிட்டால் ஒரே ஆட்டத்தில் சதத்தோடு 8 விக்கெட்டுகளும் சாய்த்த 30 வயதான கவுதமின் சாதனை பெரிய அளவில் பேசப்பட்டு இருக்கும்.

மேலும் செய்திகள்