இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Update: 2019-08-26 23:45 GMT
கொழும்பு,

இலங்கை - நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் இலங்கை 244 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 110 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 382 ரன்கள் குவித்து இருந்தது. வாட்லிங் 81 ரன்களுடனும், கிரான்ட்ஹோம் 83 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

நேற்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 115 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 431 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. கிரான்ட்ஹோம் 83 ரன்னில் ஆட்டம் இழந்தார். 7-வது சதம் அடித்த வாட்லிங் 105 ரன்னுடனும், டிம் சவுதி 24 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

187 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி, நியூசிலாந்து வீரர்களின் சிறப்பான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 70.2 ஓவர்களில் 122 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 65 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக டிக்வெல்லா 51 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார்கள். நியூசிலாந்து அணி தரப்பில் டிரென்ட் பவுல்ட், டிம் சவுதி, அஜாஸ் பட்டேல், வில்லியம் சோமெர்வில்லி தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள். 154 ரன்கள் சேர்த்த நியூசிலாந்து வீரர் டாம் லாதம் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. காலேவில் நடந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. இதனை அடுத்து இவ்விரு அணிகள் இடையே 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடர் நடைபெறுகிறது. இதில் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பல்லகெலேவில் செப்டம்பர் 1-ந் தேதி நடக்கிறது.

மேலும் செய்திகள்