அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு: தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் ஆகிறார், ரூபா குருநாத்

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக ரூபா குருநாத் ஒருமனதாக தேர்வாகிறார். மற்ற நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்கள்.

Update: 2019-09-26 00:05 GMT
சென்னை,

லோதா கமிட்டி பரிந்துரையின் படி இந்திய கிரிக்கெட் வாரியத்திலும், மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகத்திலும் பல சீர்திருத்தம் செய்யப்பட்டுள்ளன. 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் பதவியில் இருக்கக்கூடாது. ஒருவர் தொடர்ந்து 2 முறை பதவி வகித்தால் அடுத்து ஒரு இடைவெளி விட்டு தான் பதவிக்கு வர முடியும். கிரிக்கெட் அமைப்பில் ஒரே நேரத்தில் ஒருவர் இரண்டு பதவி வகிக்கக்கூடாது ஆகியவை லோதா கமிட்டி சிபாரிசுகளில் முக்கியமானதாகும்.

இந்த புதிய விதிமுறைகளின் படி தான் மாநில கிரிக்கெட் சங்கங்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 23-ந் தேதி நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக அனைத்து மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கும் நிர்வாகிகள் தேர்தல் நடத்த அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. இதன்படி பெரும்பாலான மாநில கிரிக்கெட் சங்கங்கள் தேர்தலை நடத்தி விட்டன.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய தனது வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை 10.45 மணிக்கு நடத்துகிறது. நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நேற்று மாலை 5 மணிக்குள் முடிவடைந்தது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் பதவிக்கு, இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் தலைவரான என்.சீனிவாசனின் மகள் ரூபா குருநாத் வேட்பு மனு தாக்கல் செய்து இருக்கிறார். இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன முழு நேர இயக்குனரான ரூபா குருநாத் சென்னையில் உள்ள கிராண்ட்ஸ்லாம் கிரிக்கெட் கிளப்பின் செயலாளராகவும் உள்ளார். டி.ஜெ.சீனிவாசராஜ் (நகரம்), டாக்டர் பி.அசோக் சிகாமணி (மாவட்டம்) ஆகியோர் துணை தலைவர் பதவிக்கும், ஆர்.எஸ்.ராமசாமி செயலாளர் பதவிக்கும், கே.ஏ.சங்கர் இணை செயலாளர் பதவிக்கும், என்.வெங்கடராமன் உதவி செயலாளர் பதவிக்கும், ஜெ.பார்த்தசாரதி பொருளாளர் பதவிக்கும், வி.கருணாகரன், பி.எஸ்.அரவிந்த், எம்.கே.ஸ்ரீவத்சா, என்.விஜய் நிர்மல்குமார், எஸ்.பிரபு, அஜய்குமார் சந்தோக் (6 பேரும் நகரம்), சண்முகம் கவுதமன், கே.எஸ். சீனிவாசன், ஆர்.திவ்யபிரகாசம் (மூவரும் மாவட்டம்) ஆகியோர் செயற்குழு உறுப்பினர் பதவிக்கும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

வேட்பு மனு பரிசீலனை நேற்று மாலை 5 மணிக்கு மேல் நடந்தது. தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருக்கும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி டி.சந்திரசேகரன் வேட்பு மனுக்களை பரிசீலனை செய்து இறுதிப்பட்டியலை வெளியிட்டார். எந்தவொரு பதவிக்கும் போட்டி இல்லாததால் அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வாகிறார்கள். ரூபா குருநாத் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ஆகிறார். இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு உட்பட்ட மாநில கிரிக்கெட் சங்கங்களில் பெண் ஒருவர் தலைவராக பொறுப்பேற்க இருப்பது இதுவே முதல்முறையாகும்.

மேலும் செய்திகள்