பெண்கள் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய வீராங்கனை அலிசா 148 ரன்கள் குவித்து புதிய சாதனை

பெண்கள் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய வீராங்கனை அலிசா 148 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்தார்.

Update: 2019-10-02 22:47 GMT
சிட்னி,

ஆஸ்திரேலியா - இலங்கை பெண்கள் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுக்கு 226 ரன்கள் குவித்தது. தொடக்க வீராங்கனையாக களம் புகுந்த விக்கெட் கீப்பரான அலிசா ஹீலே 148 ரன்கள் (61 பந்து, 19 பவுண்டரி, 7 சிக்சர்) விளாசி புதிய சாதனை படைத்தார். பெண்கள் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் ஒரு வீராங்கனையின் தனிநபர் அதிகபட்சம் இது தான். இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவின் மெக் லானிங் 133 ரன்கள் (இங்கிலாந்துக்கு எதிராக) எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. 29 வயதான அலிசா ஹீலே, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மிட்செல் ஸ்டார்க்கின் மனைவி ஆவார். பின்னர் ஆடிய இலங்கை அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 94 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் தொடரையும் 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

மேலும் செய்திகள்