இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்க அணிக்கு 395 ரன்கள் இலக்கு

இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணிக்கு 395 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

Update: 2019-10-05 23:00 GMT
விசாகப்பட்டினம்,

இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணிக்கு 395 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்

இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 502 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. மயங்க் அகர்வால் இரட்டை சதமும் (215 ரன்), ரோகித் சர்மா சதமும் (176 ரன்) அடித்தனர்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 3-வது நாள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 385 ரன்கள் எடுத்து இருந்தது. அதிகபட்சமாக டீன் எல்கர் 160 ரன்னும், குயின்டான் டி காக் 111 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். செனுரன் முத்துசாமி 12 ரன்னுடனும், கேஷவ் மகராஜ் 3 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

தென்ஆப்பிரிக்கா 431 ரன்கள்

நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. செனுரன் முத்துசாமி, கேஷவ் மகராஜ் ஆகியோர் தொடர்ந்து ஆடினார்கள். அஸ்வின் பந்து வீச்சை அடித்து ஆடிய கேஷவ் மகராஜ் (9 ரன்) மயங்க் அகர்வாலிடம் எளிதாக கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த ரபடா அடித்து ஆடினார். 17 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 15 ரன்கள் எடுத்த ரபடா, ஆர்.அஸ்வின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.

131.2 ஓவர்களில் தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 431 ரன்கள் எடுத்து ‘ஆல்-அவுட்’ ஆனது. செனுரன் முத்துசாமி 106 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 33 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆர்.அஸ்வின் 7 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டும், வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

மயங்க் அகர்வால்

7 ரன்னில் அவுட்

71 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வால், ரோகித் சர்மா ஆகியோர் களம் இறங்கினார்கள். முதல் இன்னிங்சில் இரட்டை சதம் அடித்த மயங்க் அகர்வால் (7 ரன்) கேஷவ் மகராஜ் பந்து வீச்சில் சிலிப்பில் நின்ற கேப்டன் டுபிளிஸ்சிடம் கேட்ச் கொடுத்து ஏமாற்றம் அளித்தார். அப்போது அணியின் ஸ்கோர் 21 ரன்னாக இருந்தது.

அடுத்து புஜாரா, ரோகித் சர்மாவுடன் இணைந்தார். தென்ஆப்பிரிக்க பவுலர்கள் நேர்த்தியாக பந்து வீசி நெருக்கடி கொடுத்தனர். முதல் இன்னிங்சை போல் இந்த இன்னிங்சிலும் விசுவரூபம் எடுத்த ரோகித் சர்மா அடித்து ஆடினார். மறுமுனையில் முதலில் நிதானமான ஆட்டத்தை கடைப்பிடித்த புஜாரா பிறகு அதிரடி காட்டினார். அணியின் ஸ்கோர் 190 ரன்னாக உயர்ந்த போது புஜாரா (81 ரன்கள், 148 பந்துகளில் 13 பவுண்டரி, 2 சிக்சருடன்) வேகப்பந்து வீச்சாளர் பிலாண்டர் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். அவுட் கொடுத்த நடுவரின் முடிவை எதிர்த்து புஜாரா செய்த அப்பீல் தோல்வியில் முடிந்தது. 2-வது விக்கெட்டுக்கு ரோகித் சர்மா, புஜாரா ஜோடி 169 ரன்கள் சேர்த்தது.

ரோகித் சர்மா சதம்

அடுத்து ரவீந்திர ஜடேஜா களம் இறங்கினார். நிலைத்து நின்று அபாரமாக ஆடிய ரோகித் சர்மா 133 பந்துகளில் தனது 5-வது சதத்தை பூர்த்தி செய்தார். முதல் இன்னிங்சிலும் ரோகித் சர்மா சதம் கண்டு இருந்தார். தொடக்க ஆட்டக்காரராக அவதாரம் எடுத்த முதல் டெஸ்ட் போட்டியிலேயே ரோகித் சர்மா கலக்கலாக விளையாடி அனைவரையும் கவர்ந்தார்.

டேன் பீட் வீசிய ஒரு ஓவரில் தொடர்ச்சியாக 3 சிக்சர் தூக்கி அசத்திய ரோகித் சர்மா (127 ரன்கள், 149 பந்துகளில் 10 பவுண்டரி, 7 சிக்சருடன்) அடுத்த ஓவரில் கேஷவ் மகராஜ் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக்கினால் ‘ஸ்டம்பிங்’ செய்யப்பட்டு ஆட்டம் இழந்தார். அடித்து ஆடிய ரவீந்திர ஜடேஜா 32 பந்துகளில் 3 சிக்சருடன் 40 ரன்கள் எடுத்த நிலையில் ரபடா பந்து வீச்சில் போல்டு ஆனார்.

தென்ஆப்பிரிக்காவுக்கு 395 ரன்கள் இலக்கு

இதைத்தொடர்ந்து ரஹானே, கேப்டன் விராட்கோலியுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அணியின் முன்னிலையை அதிகரிக்கும் நோக்கில் அதிரடியாக ஆடினார்கள். இந்திய அணி 2-வது இன்னிங்சில் 67 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 323 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. கேப்டன் விராட்கோலி 25 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 31 ரன்னும், ரஹானே 17 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 27 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். தென்ஆப்பிரிக்க அணி தரப்பில் கேஷவ் மகராஜ் 2 விக்கெட்டும், பிலாண்டர், ரபடா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் 395 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய தென்ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மார்க்ராம், டீன் எல்கர் ஆகியோர் இறங்கினார்கள். முதல் இன்னிங்சில் சதம் அடித்த டீன் எல்கர் (2 ரன்) ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். இதற்கு நடுவர் அவுட் வழங்காததால் இந்திய அணி தரப்பில் அப்பீல் செய்யப்பட்டது. இதனை ஆய்வு செய்த பிறகு நடுவர் டீன் எல்கர் ‘அவுட்’ என்று அறிவித்தார்.

இன்று கடைசி நாள் ஆட்டம்

நேற்றைய ஆட்டம் முடிவில் தென்ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்சில் ஒரு விக்கெட் இழப்புக்கு 11 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் மார்க்ராம் 3 ரன்னுடனும், டி புருன் 5 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. ஆட்டம் காலை 9 மணிக்கு தொடங்குகிறது. தென்ஆப்பிரிக்க அணி வெற்றிக்கு மேலும் 384 ரன்கள் தேவைப்படுகிறது. அந்த அணி கைவசம் 9 விக்கெட்டுகள் எஞ்சி இருக்கிறது. இதனால் இந்த ஆட்டம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

மேலும் செய்திகள்