தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்திய அணி சிறப்பான தொடக்கம் மயங்க் அகர்வால் சதம் அடித்தார்

புனேயில் நேற்று தொடங்கிய தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் மயங்க் அகர்வாலின் சதத்தின் உதவியுடன் இந்திய அணி சிறப்பான தொடக்கம் கண்டுள்ளது.

Update: 2019-10-10 23:00 GMT
புனே,

இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இதில் விசாகப்பட்டினத்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நேற்று தொடங்கியது. புனேயில் தற்போது அடிக்கடி மழை பெய்கிறது. முந்தைய நாள் கூட மழை கொட்டியது. வேகப்பந்து வீச்சுக்கு உகந்த சீதோஷ்ண நிலையை கருத்தில் கொண்டு இந்திய அணியில் ஹனுமா விஹாரி நீக்கப்பட்டு வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவும், தென்ஆப்பிரிக்க அணியில் சுழற்பந்து வீச்சாளர் டேன் பீட்டுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நார்ஜேவும் சேர்க்கப்பட்டனர்.

‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் விராட் கோலி தயக்கமின்றி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி மயங்க் அகர்வாலும், ரோகித் சர்மாவும் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். காஜிசோ ரபடா, பிலாண்டர், அன்ரிச் நார்ஜே உள்ளிட்டோர் புயல்வேக தாக்குதலை தொடுத்தனர்.

தொடக்கத்தில் பந்து நன்கு பவுன்ஸ் ஆனதுடன், சீறிப்பாய்ந்தது. இதனால் இந்திய வீரர்கள் எச்சரிக்கையான அணுகுமுறையை கையாண்டனர். என்றாலும் கடந்த டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த ரோகித் சர்மா (14 ரன், 35 பந்து) இந்த முறை தாக்குப்பிடிக்கவில்லை. அவர், வேகப்பந்து வீச்சாளர் ரபடாவின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக்கிடம் சிக்கினார். அடுத்து வந்த புஜாரா ரன் கணக்கை தொடங்கும் முன்பே வெளியேறி இருக்க வேண்டியது. அவர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை அருகில் நின்ற பவுமா வீணடித்தார்.

இதே போல் மற்றொரு தொடக்க வீரர் மயங்க் அகர்வாலுக்கும் அதிர்ஷ்டம் துணை நின்றது. அவர் 5 ரன்னில் இருந்த போது, பிலாண்டரின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. கேட்டு தென்ஆப்பிரிக்க அணியினர் முறையிட்டனர். நடுவர் விரலை உயர்த்தாததால் டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தின்படி அப்பீல் செய்தனர். டி.வி. ரீப்ளேயில் பந்து ஸ்டம்பை லேசாக தாக்குவது தெரிந்தது. ‘நடுவரின் முடிவு’ என்று கூறப்பட்டதால் தப்பினார்.

மணிக்கு 148 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசிய நார்ஜேவின் ஒரு பவுன்சர் பந்து அகர்வாலின் ஹெல்மெட்டை தாக்கியது. ஆனால் எந்த பாதிப்பும் இல்லை. இத்தகைய தடுமாற்றத்தில் இருந்து தன்னை வெகுசீக்கிரமாகவே விடுவித்து கொண்ட அகர்வால், நார்ஜேவின் ஒரே ஓவரில் 3 பவுண்டரிகளை விளாசினார். அதன் பிறகு அணியின் ஸ்கோர் சீரான வேகத்தில் நகர்ந்தது. மதிய உணவு இடைவேளையின் போது இந்தியா ஒரு விக்கெட்டுக்கு 77 ரன்கள் எடுத்திருந்தது.

22-வது அரைசதத்தை எட்டிய புஜாரா 58 ரன்களில் (112 பந்து, 9 பவுண்டரி, 1 சிக்சர்) ரபடாவின் பந்து வீச்சில் ஸ்லிப்பில் நின்ற பிளிஸ்சிஸ்சிடம் கேட்ச் ஆனார். இதையடுத்து கேப்டன் விராட் கோலி நுழைந்தார்.

மறுமுனையில் அபாரமாக ஆடிய அகர்வால், 87 ரன்னில் இருந்த போது கேஷவ் மகராஜின் சுழலில் அடுத்தடுத்து இரு பிரமாதமான சிக்சர்களை பறக்க விட்டு ரசிகர்களை பரவசப்படுத்தினார். தொடர்ந்து பிலாண்டரின் பந்து வீச்சில் பவுண்டரி அடித்து தனது 2-வது சதத்தை நிறைவு செய்தார். ஏற்கனவே முதலாவது டெஸ்டில் அவர் இரட்டை சதம் அடித்தது நினைவிருக்கலாம்.

அணியின் ஸ்கோர் 198 ரன்களாக உயர்ந்த போது அகர்வாலும் (108 ரன், 195 பந்து, 16 பவுண்டரி, 2 சிக்சர்) ரபடாவின் பந்து வீச்சிலேயே வீழ்ந்தார். அவர் ஸ்லிப்பில் நின்ற பிளிஸ்சிஸ்சிடம் பிடிபட்டார். அடுத்து துணை கேப்டன் அஜிங்யா ரஹானே வந்தார்.

கோலி - ரஹானே ஜோடியினர் மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். மேகமூட்டமான வானிலை காரணமாக கடைசி கட்ட பகுதியில் மின்விளக்குகள் எரியவிடப்பட்டது. ஆனாலும் போதிய வெளிச்சம் இன்மையால் 4.5 ஓவர்களுக்கு முன்பாகவே ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது

ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 85.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 273 ரன்கள் சேர்த்து வலுவான நிலையில் உள்ளது. தனது 23-வது அரைசதத்தை கடந்த கேப்டன் விராட் கோலி 63 ரன்களுடனும் (105 பந்து, 10 பவுண்டரி), ரஹானே 18 ரன்களுடனும் (70 பந்து, 3 பவுண்டரி) அவுட் ஆகாமல் உள்ளனர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறும்.

ஸ்கோர் போர்டு

முதல் இன்னிங்ஸ்

இந்தியா

மயங்க் அகர்வால் (சி) பிளிஸ்சிஸ் (பி) ரபடா 108

ரோகித் சர்மா (சி) டி காக் (பி) ரபடா 14

புஜாரா (சி) பிளிஸ்சிஸ் (பி) ரபடா 58

விராட் கோலி (நாட்-அவுட்) 63

ரஹானே (நாட்-அவுட்) 18

எக்ஸ்டிரா 12

மொத்தம் (85.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு) 273

விக்கெட் வீழ்ச்சி: 1-25, 2-163, 3-198

பந்து வீச்சு விவரம்

பிலாண்டர் 17-5-37-0

ரபடா 18.1-2-48-3

நார்ஜே 13-3-60-0

கேஷவ் மகராஜ் 29-8-89-0

முத்துசாமி 6-1-22-0

டீன் எல்கர் 2-0-11-0

‘முதல்தர போட்டி அனுபவம் அகர்வாலுக்கு கைகொடுக்கிறது’- புஜாரா

2-வது டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்திற்கு பிறகு இந்திய வீரர் புஜாரா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘மயங்க் அகர்வால் அனுபவம் வாய்ந்த ஒரு வீரர். முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் அதிகமான ரன்கள் குவித்துள்ளார். இது அவர் சர்வதேச போட்டியில் சாதிப்பதற்கு உதவிகரமாக இருக்கிறது. பொதுவாக சதத்தை நெருங்கும் போது பதற்றம் வந்து விடும். ஆனால் மயங்க் அகர்வால் அந்த சமயத்தில் அச்சமின்றி விளையாடுகிறார். அரைசதத்தை எப்படி பெரிய ஸ்கோராக மாற்ற வேண்டும் என்பது அவருக்கு தெரிகிறது. அதே நேரத்தில் 100 ரன்களை கடந்ததும் அவரால் அதிவேகமாக ரன்கள் எடுக்க முடியும். அதை கடந்த டெஸ்டில் நாம் பார்த்தோம். டெஸ்டில் அதிக ரன்கள் குவிக்கும் பழக்கம், முதல்தர கிரிக்கெட் போட்டி அனுபவம் மூலமே கிடைக்கிறது. அதனால் அவரிடம் அது பற்றி அதிகமாக பேசவில்லை. பார்ட்னர்ஷிப்பின் போது ஆட்ட திட்டமிடல் குறித்து மட்டுமே ஆலோசித்தேன்’ என்றார்.

சாதனை துளிகள்

* கோலியின் தலைமையில் இந்திய அணி விளையாடும் 50-வது டெஸ்ட் இதுவாகும். டோனிக்கு (60 டெஸ்ட்) அடுத்து அதிக போட்டிகளுக்கு அணியை வழிநடத்திய இந்திய கேப்டன் கோலி தான்.

* தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக அடுத்தடுத்து இரு டெஸ்டுகளில் சதம் அடித்த 2-வது இந்தியர் என்ற சிறப்பை மயங்க் அகர்வால் பெற்றார். ஏற்கனவே ஷேவாக் 2010-ம் ஆண்டில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக அடுத்தடுத்து சதம் அடித்திருந்தார்.

* இந்த தொடரில் இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மாவும், மயங்க் அகர்வாலும் இணைந்து இதுவரை 4 சதம் அடித்துள்ளனர். டெஸ்ட் தொடர் ஒன்றில் இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் 4 சதம் அடிப்பது இது 4-வது நிகழ்வாகும்.

மேலும் செய்திகள்