தெண்டுல்கர், ஷேவாக்கை பின்னுக்கு தள்ளி டெஸ்டில் அதிக இரட்டை சதம் அடித்த கோலி

தெண்டுல்கர், ஷேவாக்கை பின்னுக்கு தள்ளி டெஸ்டில் இந்திய வீரர் விராட் கோலி அதிக இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார்.

Update: 2019-10-11 23:32 GMT
புனே,

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக புனேயில் நடந்து வரும் 2-வது டெஸ்டில் இந்திய கேப்டன் விராட் கோலி 33 பவுண்டரி, 2 சிக்சருடன் 254 ரன்கள் குவித்து வியப்பூட்டியதுடன், பல்வேறு சாதனைகளுக்கும் சொந்தக்காரர் ஆனார். இது அவரது 7-வது இரட்டை சதமாகும். இதன் மூலம் டெஸ்டில் அதிக இரட்டை சதங்கள் ருசித்த இந்திய வீரர் என்ற மகிமையை பெற்றார். இதற்கு முன்பு ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், ஷேவாக் ஆகியோருடன் தலா 6 இரட்டை சதத்துடன் சமனில் இருந்தார். அவர்களை கோலி இப்போது பின்னுக்கு தள்ளியுள்ளார்.

* ‘ரன் குவிக்கும் எந்திரம்’ என்று வர்ணிக்கப்படும் 30 வயதான விராட் கோலி தனது முதலாவது இரட்டை சதத்தை 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அடித்திருந்தார். அதன் பிறகு 3 ஆண்டுகளில் அவரது இரட்டை சத எண்ணிக்கை 7 ஆக உயர்ந்து விட்டது. இந்த காலக்கட்டத்தில் மற்ற வீரர்களில் யாரும் 2 இரட்டை சதங்களுக்கு மேல் அடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

* வெஸ்ட் இண்டீஸ் (200 ரன்), நியூசிலாந்து (211), இங்கிலாந்து (235), வங்காளதேசம் (204), இலங்கை (213 மற்றும் 243), தென்ஆப்பிரிக்கா (254*) ஆகிய அணிகளுக்கு எதிராக கோலி இரட்டை சதத்தை பதிவு செய்துள்ளார். இதே போல் 6 அணிகளுக்கு எதிராக இரட்டை சதம் அடித்தவர்கள் என்று பார்த்தால், இலங்கையின் சங்கக்கரா, பாகிஸ்தானின் யூனிஸ்கான் ஆகியோரும் இச்சாதனையை செய்துள்ளனர். டெஸ்ட் விளையாடிய அணிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மட்டுமே கோலிக்கு இரட்டை சதம் இன்னும் எட்டாக்கனியாக இருக்கிறது.



 




250 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் இந்திய கேப்டன்

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்த டெஸ்டில் இந்திய கேப்டன் விராட் கோலி 254 ரன்கள் குவித்து புதிய வரலாறு படைத்துள்ளார். அதாவது டெஸ்டில் ஒரு இன்னிங்சில் 250 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் இந்திய கேப்டன் என்ற சாதனை மகுடம் அவரை அலங்கரிக்கிறது. இந்த வகையில் முந்தைய அதிகபட்ச ரன்னும் கோலியின் வசமே (2017-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக 243 ரன்) இருந்தது.

மேலும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இரட்டை சதம் கண்ட முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையையும் பெற்றார். இதற்கு முன்பு 1997-ம்ஆண்டு கேப்டவுனில் நடந்த டெஸ்டில் சச்சின் தெண்டுல்கர் 169 ரன்கள் எடுத்ததே அந்த அணிக்கு எதிராக இந்திய கேப்டனின் சிறந்த ஸ்கோராக இருந்தது. அத்துடன் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இரட்டை சதம் அடித்த ஒட்டுமொத்த கேப்டன்களின் வரிசையில் 7-வது கேப்டனாக கோலி இணைந்துள்ளார்.

7 ஆயிரம் ரன்களை கடந்தார், கோலி

* புனே டெஸ்டில் இந்திய கேப்டன் விராட் கோலி 200 ரன்களை எடுத்த போது டெஸ்டில் 7 ஆயிரம் ரன்களை தாண்டிய 7-வது இந்தியர் என்ற சிறப்பை தன்னகத்தே இணைத்துக் கொண்டார். 81-வது டெஸ்டில் விளையாடும் கோலி அதில் 138 இன்னிங்சில் பேட்டிங் செய்து இந்த மைல்கல்லை எட்டியிருக்கிறார். இந்த இலக்கை அதிவேகமாக எட்டிய வீரர்களின் பட்டியலில் வெஸ்ட் இண்டீசின் கேரி சோபர்ஸ், இலங்கையின் சங்கக்கரா ஆகியோருடன் 4-வது இடத்தை கோலி பகிர்ந்துள்ளார். இதில் இங்கிலாந்தின் வாலி ஹேமண்ட் (131-வது இன்னிங்ஸ்), இந்தியாவின் ஷேவாக் (134), தெண்டுல்கர் (136) முதல் 3 இடங்களில் உள்ளனர்.

* கோலிக்கு கேப்டனாக இது 50-வது டெஸ்டாகும். கேப்டனாக 50-வது டெஸ்டில் சதம் அடித்த 4-வது வீரர் கோலி ஆவார். இதற்கு முன்பு ஸ்டீபன் பிளமிங் (நியூசிலாந்து), ஸ்டீவ் வாக் (ஆஸ்திரேலியா), அலஸ்டயர் குக் (இங்கிலாந்து) ஆகியோர் இவ்வாறு சதம் அடித்துள்ளனர்.

* கேப்டனாக விராட் கோலி மொத்தத்தில் 40 சர்வதேச சதங்கள் (ஒரு நாள் போட்டியில் 21, டெஸ்டில் 19) நொறுக்கியுள்ளார். இந்த வகையில் ஆஸ்திரேலியாவின் ரிக்கிபாண்டிங் (41 சதம்) மட்டுமே அவரை விட முன்னணியில் இருக்கிறார்.

* சர்வதேச கிரிக்கெட் அரங்கில் (டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டி) வேகமாக 21 ஆயிரம் ரன்களை (435 இன்னிங்சில் 21,024 ரன்) எட்டிய சாதனையாளராகவும் கோலி திகழ்கிறார். முன்பு சச்சின் தெண்டுல்கரிடம் (473 இன்னிங்ஸ்) இச்சாதனை இருந்தது.

* விராட் கோலியையும் சேர்த்து இதுவரை 5 இந்தியர்கள் ஒரு இன்னிங்சில் 250 ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளனர். வி.வி.எஸ்.லட்சுமண், ராகுல் டிராவிட், கருண் நாயர், ஷேவாக் (4 முறை) மற்ற இந்தியர்கள் ஆவர்.

எது சிறந்த இரட்டை சதம்? - விராட் கோலி பதில்


இந்திய கேப்டன் விராட்கோலி கூறுகையில், ‘தொடக்கத்தில் பெரிய ஸ்கோர் குவிப்பதில் தடுமாற்றம் கண்டேன். ஆனால் கேப்டன் பொறுப்பை ஏற்ற பிறகு தனிப்பட்ட ஆட்டத்தை விட அணியை முன்னெடுத்து செல்வதில் தான் எப்போதும் கவனம் உள்ளது. அந்த பொறுப்புணர்வு பெரிய ஸ்கோர் குவிக்க உதவுகிறது. எனது 7 இரட்டை சதங்களில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக அடித்ததை சிறப்பு வாய்ந்தவையாக சொல்வேன். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 200 ரன்கள் வெளிநாட்டு மண்ணில் அடித்தது. இங்கிலாந்துக்கு எதிரான இரட்டை சதம் சவாலான சீதோஷ்ண நிலையில் எடுத்தது’ என்றார்.

மேலும் செய்திகள்