மிடில் ஓவர்களில் நாங்கள் இன்னும் நிறைய முயற்சி செய்திருக்க வேண்டும் - ஹர்திக் பாண்ட்யா

டெல்லி அணி சார்பாக விளையாடிய ஜேக் பிரேசர் மெக்கர்க் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என பாண்ட்யா கூறினார்.

Update: 2024-04-27 19:10 GMT

Image Courtesy: X (Twitter) 

டெல்லி,

ஐ.பி.எல் தொடரில் நேற்று மாலை டெல்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய - டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஜேக் ப்ரேசர் மெக்கர்க்கின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 257 ரன்கள் குவித்தது.

டெல்லி தரப்பில் அதிகபட்சமாக ஜேக் ப்ரேசர் மெக்கர்க் 27 பந்தில் 84 ரன்கள் அடித்தார். இதையடுத்து 258 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 247 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 10 ரன் வித்தியாசத்தில் டெல்லி திரில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் அபாரமாக ஆடிய டெல்லி வீரர் ஜேக் ப்ரேசர் மெக்கர்க்கிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இதையடுத்து இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்த பின் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா அளித்த பேட்டியில் கூறியதாவது, இந்த போட்டி முற்றிலுமாக கடைசி வரை நெருக்கமாக சென்றது. இருப்பினும் இறுதியில் நாங்கள் தோல்வியை சந்திக்க நேர்ந்தது.

ஏனெனில் இதுபோன்ற போட்டிகளில் இரு அணிகளுக்கும் சரிசமமான அழுத்தம் இருக்கும். இருந்தாலும் நாங்கள் இறுதிவரை போராட முடியும் என்று நினைத்தோம். மிடில் ஓவர்களில் நாங்கள் இன்னும் நிறைய முயற்சி செய்திருக்க வேண்டும். அந்த இடத்தில் ரன் குவிப்பை கோட்டை விட்டோம்.

டெல்லி அணி சார்பாக விளையாடிய ஜேக் பிரேசர் மெக்கர்க் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தேவையான பந்துகளில் எல்லாம் மிகச்சரியாக ரிஸ்க் எடுத்து பவுண்டரிகளை விளாசினார். அவர் ஆடிய ஆட்டம் பயமற்ற ஆட்டம் என்று தெரிந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்