இதுவரை நடந்த பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் ஒரு கண்ணோட்டம்

இதுவரை நடந்துள்ள பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா விளையாடப்போகும் முதல் போட்டி இதுவாகும்.

Update: 2019-11-19 23:38 GMT

இந்தியா - வங்காளதேசம் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டனில் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) பகல்-இரவு மோதலாக தொடங்குகிறது. இந்தியா விளையாடப்போகும் முதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டி இது தான்.

வரலாற்று சிறப்பு மிக்க இந்த போட்டியை மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜியுடன் இணைந்து வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா மணியடித்து தொடங்கி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி இவ்விரு அணி வீரர்களும் மின்னொளியில் இளஞ்சிவப்பு நிற பந்தில் (பிங்க்) பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். முதல்முறையாக பிங்க் பந்தில் ஆடுவது நமது வீரர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும்.

பகல்-இரவு டெஸ்ட் வழக்கமாக பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பிக்கும். ஆனால் கொல்கத்தாவில் இரவு நேரத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக அதாவது பிற்பகல் 1 மணிக்கே இந்த போட்டி தொடங்க உள்ளது.

20 ஓவர் கிரிக்கெட் அவதாரம் எடுத்த பிறகு டெஸ்ட் கிரிக்கெட் மீதான மோகம் குறைந்து விட்டது. பல டெஸ்ட் போட்டிகளில் மைதானம் ரசிகர்கள் இன்றி வெறிச்சோடி கிடப்பதை அவ்வப்போது காணமுடிகிறது.

டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ரசிகர்களை கவர்ந்திழுக்கும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டது தான் பகல்-இரவு டெஸ்ட். மாலையில் வேலையை முடித்துக் கொண்டு அதன் பிறகு சில மணி நேரம் நேரில் வந்து டெஸ்ட் போட்டியை ரசிகர்கள் பார்க்கலாம்.

142 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் பகல்-இரவாக மொத்தம் 11 போட்டிகள் நடந்துள்ளது. ஆஸ்திரேலியா இதுவரை ஆடிய 5 பகல்-இரவு போட்டிகளிலும் வெற்றி வாகை சூடியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 3 போட்டிகளிலும் தோல்வியே மிஞ்சியது.

இதுவரை நடந்துள்ள பகல்-இரவு டெஸ்ட் குறித்த ஒரு அலசல் வருமாறு:-

1. பகல்-இரவு டெஸ்ட் போட்டி முதல்முறையாக 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் அடிலெய்டில் நடந்தது. ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் மோதிய இந்த டெஸ்ட் போட்டி வெறும் 3 நாட்களில் முடிவுக்கு வந்தது. மிளிரும் தன்மை கொண்ட பிங்க் பந்தை எதிர்கொண்டு ஆடுவதில் இரு அணி பேட்ஸ்மேன்களும் தகிடுதத்தம் போட்டனர். வேகப்பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் மேலோங்கியது. முதல் இன்னிங்சில் முறையே நியூசிலாந்து 202 ரன்களும், ஆஸ்திரேலியா 224 ரன்களும் எடுத்தன. 22 ரன்கள் பின்தங்கிய நியூசிலாந்து 2-வது இன்னிங்சில் 208 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 187 ரன்கள் இலக்கை உள்ளூர் அணியான ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகளை இழந்து தான் எட்டிப்பிடித்தது. அடிலெய்டில், 1993-ம் ஆண்டுக்கு பிறகு ஒரு வீரர் கூட சதம் அடிக்காத டெஸ்ட் போட்டியாக இது பதிவானது. ஆனால் இந்த 3 நாட்களிலும் மொத்தம் 1 லட்சத்து 23 ஆயிரத்து 736 ரசிகர்கள் நேரில் வந்து போட்டியை கண்டுகளித்தனர்.



 



  2. துபாயில் நடந்த (2016-ம் ஆண்டு அக்டோபர்) இந்த டெஸ்டில் பாகிஸ்தான்-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் சந்தித்தன. இது பாகிஸ்தானின் 400-வது டெஸ்ட் என்பது இன்னொரு சிறப்பம்சமாகும். இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுக்கு 579 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. அசார் அலி முச்சதம் (302 ரன், 469 பந்து, 23 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். பகல்-இரவு டெஸ்டில் சதம், இரட்டை சதம், முச்சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனைக்கு அசார் அலி சொந்தக்காரர் ஆனார். வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சில் 357 ரன்னில் ஆட்டம் இழந்தது. அடுத்து 222 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் 123 ரன்னில் சுருண்டது. சுழற்பந்து வீச்சாளர் தேவேந்திர பிஷூ 8 விக்கெட்டுகளை அள்ளினார். இதையடுத்து 346 ரன்கள் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் டேரன் பிராவோ சதம் (116 ரன்) அடித்து போராடியும் பிரயோஜனம் இல்லை. வெஸ்ட் இண்டீஸ் அணி 289 ரன்களில் ஆல்-அவுட் ஆகி 56 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

3. அடிலெய்டில் நடந்த இந்த டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்தது. தென்ஆப்பிரிக்க அணியில் முதல் இன்னிங்சில் கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ்சும் (118 ரன்), 2-வது இன்னிங்சில் ஸ்டீபன் குக்கும் (104 ரன்) சதம் அடித்தும் பலன் கிட்டவில்லை.

4. பிரிஸ்பேனில் நடந்த திரிலிங்கான இந்த டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இதில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 490 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணி நெருங்கி வந்து 450 ரன்களில் ஆல்-அவுட் ஆகிப்போனது. ஆசாத் ஷபிக் 137 ரன்கள் சேர்த்தார்.

5. இங்கிலாந்து அணியின் முதல் பகல்-இரவு டெஸ்ட் இதுவாகும். பர்மிங்காமில் அரங்கேறிய இந்த டெஸ்டில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 209 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை பந்தாடியது. இங்கிலாந்து வீரர்கள் அலஸ்டயர் குக்கின் இரட்டை சதமும் (243 ரன்), ஜோ ரூட்டின் சதமும் (136 ரன்) இந்த டெஸ்டை 3-வது நாளிலேயே முடிவுக்கு கொண்டு வர உதவின.

6. துபாயில் நடந்த இந்த போட்டியில் இலங்கை அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பதம் பார்த்தது.

7. அடிலெய்டில் நடந்த இந்த ஆட்டம், ஆஷஸ் தொடரில் முதல் பகல்-இரவு டெஸ்டாக அமைந்தது. பகல்- இரவு டெஸ்டில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்த அணி என்ற பெருமையோடு அடியெடுத்து வைத்த இங்கிலாந்து 120 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலியாவிடம் ‘சரண்’ அடைந்தது.

8. தென்ஆப்பிரிக்கா-ஜிம்பாப்வே இடையிலான இந்த டெஸ்டில் புதுமையான ஒரு விஷயம் என்னவென்றால் இது 4 நாள் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது. ஆனால் 2-வது நாளிலேயே முடிவுக்கு வந்தது இன்னொரு ஆச்சரியம். சொந்த மண்ணில் களம் கண்ட தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 309 ரன் சேர்த்து ‘டிக்ளேர்’ செய்தது. ஜிம்பாப்வே இரு இன்னிங்சில் முறையே 68, 121 ரன்னில் முடங்கியது. தென்ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 120 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது.

9. ஆக்லாந்தில் நடந்த இந்த டெஸ்டில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 49 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை புரட்டியெடுத்தது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து வெறும் 58 ரன்னில் அடங்கிப்போனது குறிப்பிடத்தக்க அம்சமாகும். நியூசிலாந்துக்கு எதிராக அந்த அணியின் மோசமான ஸ்கோர் இது தான். இரண்டு இன்னிங்சையும் சேர்த்து நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் 9 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

10. பிரிட்ஜ்டவுனில் நடந்த இந்த டெஸ்டில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வென்றது. முதல் இரு நாட்கள் மழையால் பெரும்பகுதி ஆட்டம் பாதிக்கப்பட்ட நிலையில் 3-வது நாளில் மட்டும் 20 விக்கெட் வீழ்த்தப்பட்டது, முடிவு கிடைக்க வித்திட்டது. வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் ஒரே நாளில் சரிந்த அதிகபட்ச விக்கெட் எண்ணிக்கை இது தான்.

11. ஆண்டின் தொடக்கத்தில் பிரிஸ்பேனில் நடந்த இந்த டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 40 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை ஊதித்தள்ளியது. இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து மொத்தம் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஸ்திரேலிய பவுலர் பேட் கம்மின்ஸ் ஆட்டநாயகனாக ஜொலித்தார்.

மேலும் செய்திகள்